சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 15 ஆண்டுகள்… நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட அவரது சகோதரர் விகாஸ் கோலி!
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி பலரும் கொண்டாடி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரது சகோதரர் ஆன விகாஸ் கோலி ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 15 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள நிலையில், அவரது சகோதரர் விகாஸ் கோலி, இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விராட் கோலி 15 ஆண்டுகள்
விராட் கோலி தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டிலும் இந்திய அணியில் அசைக்கமுடியாத சாதனைகளை உருவாக்கி வைத்துள்ளார். ரன் மெஷின், கிங் என்றெல்லாம் செல்லப் பெயர்களோடு அழைக்கப்படும் அவர், இந்திய அணியின் ஜாம்பவான் என்று ஏற்கனவே நிரூபித்து விட்டார். இனிமேல் அவர் ஆடும் ஆண்டுகளில் பல மிகப்பெரிய சாதனைகள் முடிக்கக் காத்திருக்கின்றன. குறிப்பாக சேஸிங்கில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் கோலி, சேஸ் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார். சேஸிங்கின்போது எல்லா வடிவ ஆட்டங்களையும் சேர்த்து அவருடைய ஆவரேஜ் 64.13 என்று பதிவாகி உள்ளது.
ஐபிஎல் சாதனைகள்
ஐபிஎல்-இல் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 2016 சீசனில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 973 ரன்கள் எடுத்த சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 2008 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் ஐபிஎல்லில் இருந்து ஆடி வரும் ஒருன்சில வீரர்களில் ஒருவராக உள்ளார். மேலும் ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகளாக ஆடி வரும் ஒரே வீரராகவும் திகழ்கிறார்.
கோலியின் அர்ப்பணிப்பு
யு-19 உலகக் கோப்பையை வென்று பிறகு சீனியர் அணிக்காக அறிமுகமானதில் இருந்து கோஹ்லியின் கிரிக்கெட் பயணம் வெகு தூரம் நீண்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக அணியில் தவிர்க்க முடியாத இடம் பிடித்து வருவதற்கு முக்கியமான காரணம் அவரது ஃபிட்னஸ். அதற்காக அவரது மெனக்கெடல், அர்ப்பணிப்பு, ஆகியவை பலரையும் ஈர்க்கும் விஷயமாக உள்ளது. இன்றும் பயிற்சிக்கு முதல் ஆளாக வருபவராகவும், முடிந்து கடைசியாக ரூமிற்கு திரும்பும் நபராகவும் இருப்பதாக அவரோடு ஆடும் வீரர்கள் குறிப்பிடுகிறார்கள்.
View this post on Instagram
விகாஸ் கோலி பதிவு
ஆடுகளத்திற்கு வெளியேயும் கோலியின் புகழ் எண்ணிலடங்காதது. கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களில் 300 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டு, உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி பலரும் அவருடைய மறக்க முடியாத இன்னிங்ஸ்களை நினைவு கூர்ந்தனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரது சகோதரர் ஆன விகாஸ் கோலி ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கனவுகள் கண்ட சிறுவன், அந்த கனவை நனவாக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். தினம் தினம் தன்னைத்தானே செதுக்கியவன். விழுந்து, தோல்வியடைந்து, மீண்டும் எழுந்து போராடியவன். இன்னும் தொடர்கிறது அவன் பயணம்... உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன் சகோதரா… சர்வதேச கிரிக்கெட்டில் 15 வருடங்கள் நிறைவடைந்தற்கு வாழ்த்துக்கள்," என்று எழுதி இருந்தார்.