Virat Kohli: "இந்த தலைமுறையின் மகத்தான பேட்ஸ்மேன் விராட்கோலி" இந்திய முன்னாள் வீரர் புகழாரம்!
இந்த 2023 ஆம் ஆண்டு விராட் கோலிக்கு ஒரு சிறந்த வருடமாக அமைந்தது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி:
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு இந்த வருடம் சற்று தடுமாற்றமாகவே இருந்தது. அதன்படி, ஆசியக் கோப்பையை மட்டுமே வென்ற இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒரு நாள் உலகக் கோப்பை போன்ற தொடரில் தோல்வியை சந்தித்தது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
அதேநேரம், இந்த வருடம் ஜஸ்ப்ரித் பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் உள்ளிட்டோர் காயத்தில் இருந்து குணமடைந்து இந்திய அணிக்காக தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோல், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் ஆட்டமும் இந்த வருடத்தில் எதிரணி வீரர்களை மிரட்டியது என்றே சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு தன்னுடைய திறமையை நடப்பு உலகக் கோப்பை தொடரில் காட்டினார். அது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக அமைந்தது. அதேபோல், பேட்டிங்கை பொறுத்த மட்டில் இந்திய அணியினரால் கிங் கோலி என்றும் ரன் மிஷின் என்றும் அழைக்கப்படும், விராட் கோலி அற்புதமாக விளையாடினார். அதன்படி, அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடிய விராட் கோலி தன்னுடைய அசாத்திய திறமையால் 2048 ரன்களை இந்திய அணிக்காக எடுத்து கொடுத்துள்ளார்.
கிங் கோலி:
முன்னதாக, விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்து பின்னர், சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானவர். கடந்த 15 வருடங்களாக தன்னுடைய அசாத்திய திறமையால் எதிரணி வீரர்களை மிரட்டி வருகிறார் விராட் கோலி. இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சதம் அடிக்க முடியாமல் திணறினார். ரசிகர்களும் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பின்னர், 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் சதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பினார். அதேபோல், இந்த முறை இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 765 ரன்கள் எடுத்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், சர்வதேச் அளவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார். அதன்படி விராட் கோலி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 50 சதம் அடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு விராட் கோலிக்கு ஒரு சிறந்த வருடமாக அமைந்தது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
மகத்தான பேட்ஸ்மேன்:
இது தொடர்பாக அவர், “இந்த தலைமுறையின் மகத்தான பேட்ஸ்மேன் மற்றும் சாம்பியன் வீரர் என்பதை விராட் கோலி மீண்டும் நிரூபித்தார். இந்த வருடம் அவருக்கு அபாரமானதாக அமைந்தது. கடந்த சில வருடங்களாக தடுமாறி வந்த அவருக்கு இந்த வருடம் மிகவும் சிறந்ததாக அமைந்தது என்றே நான் சொல்வேன். வெற்றிக்கான அந்த பசியும் ஆர்வமும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் ஒரு உண்மையான சாம்பியனுக்கு அடையாளமாகவும் இருந்தது. அது தான் விராட் கோலி” என்று தெரிவித்துள்ளார்.