Musheerkhan: எட்டு வயதிலே சம்பவம்! இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் - யார் இந்த முஷீர்கான்?
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக சதம் அடித்து அயர்லாந்தை வீழ்த்திய பெருமை முஷீர்கானுக்கே சேரும்.
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தொடர் மீது பி.சி.சி.ஐ. நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை:
ஜாம்பவான் வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி இன்னும் சில காலம் மட்டுமே விளையாடுவார்கள் என்பதால், அவர்களைப் போன்ற வீரர்களை உருவெடுக்க இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கான பணிகளையும் பி.சி.சி.ஐ. தொடங்கியுள்ளது. அதற்கான ஒரு தேடல் தொடக்கமாகவே இந்த 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பைத் தொடர் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த தொடர் தொடங்கியது முதல் சிலரது செயல்பாடுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் முஷீர்கான். 18 வயதே ஆன இவர் சிக்ஸர் அடிப்பதில் மிகச்சிறந்தவர் என்பதால் இவர் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே கணிக்கப்பட்டது.
யார் இந்த முஷீர்கான்?
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல, நேற்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். தொடக்க வீரர் ஆதர்ஷ் கான் 17 ரன்களில் அவுட்டாகவும் களமிறங்கிய முஷீர்கான் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார். சிறப்பாக ஆடிய அர்ஷின் குல்கர்னி 32 ரன்களில் அவுட்டாக, கேப்டன் உதய் சாஹரன் – முஷீர்கான் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் அபாரமாக ஆடி அணியை நல்ல இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். சிறப்பாக ஆடிய உதய் – முஷீர்கான் அரைசதம் கடந்து அபாரமாக ஆடினார். ஏதுவனா பந்தகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசிய முஷீர்கான் சதம் அடித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய உதய் 84 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய முஷீர்கான் 106 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 118 ரன்கள் விளாசி அவுட்டானார். அவரது அபார பேட்டிங்காலும், கடைசி கட்டத்தில் சச்சின் தாஸ் அதிரடியாலும் இந்தியா 301 ரன்களை எடுத்தது.
எட்டு வயதிலே சம்பவம்:
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி நமன் திவாரி வேகத்தில் சரிந்தது. 29.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அயர்லாந்து ஆல் அவுட்டாக இந்தியா 201 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நமன் திவாரி 4 விக்கெட்டுகளையும், செளமி பாண்டே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 18 வயதே ஆன முஷீர்கான் இந்திய அணியின் மற்றொரு வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ் கானின் தம்பி ஆவார்.
19 வயதுக்குட்பட்ட வினுமன்கட் டிராபியிலும் முஷீர்கான் 438 ரன்களை விளாசி அசத்தியிருந்தார். சிறந்த சுழற்பந்துவீச்சாளரான முஷீர்கான் 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். குறிப்பாக, 2013ம் ஆண்டு தனது சுழலால் ஜாம்பவான் யுவராஜ் சிங்கை வீழ்த்தி அன்றைய நாளிதழ்களில் பேசுபொருளானவர். அப்போது, முஷீர்கானுக்கு வெறும் 8 வயது மட்டுமே ஆகும். உள்நாட்டு தொடரில் சிறப்பாக ஆடி அசத்தி வந்த முஷீர்கான் 19 வயதுக்குட்பட்ட தொடரிலும் அசத்தி வருகிறார். தொடர்ந்து சிறப்பாக ஆடும் அவர் விரைவில் ஐ.பி.எல். தொடரில் முக்கிய வீரராக இடம்பெறுவார் என்றும், அதன்மூலம் இந்திய அணிக்குள்ளும் இடம்பெறுவார் என்றும் கருதப்படுகிறது.
மேலும் படிக்க: IND vs ENG: "இந்தியா இப்படி விளையாடுவாங்கனு நினைக்கவே இல்ல" மிரண்டுபோன இங்கிலாந்து தொடக்க வீரர் டக்கெட்!
மேலும் படிக்க: Virat Kohli: ஐசிசி விருது... நான்காவது முறையாக தட்டிச் சென்ற 'ரன் மிஷின்' விராட் கோலி!