TNCA President: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக உதயநிதி வர வாய்ப்பில்லை- ஏன் தெரியுமா?
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலிருந்து ரூபா குருநாத் இன்று ராஜினாமா செய்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று திடீரென அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது.
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று சிலர் கூறி வந்தனர். இது தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது. ஏனென்றால் பிசிசிஐயின் விதிமுறைகளின் படி உறுப்பினர்கள் மற்றும் கிரிக்கெட் சங்க தலைவர்களுக்கு சில கட்டுப்பாட்டுகள் மற்றும் தகுதிகள் உள்ளன.
அதன்படி கிரிக்கெட் சங்க தலைவர் அல்லது பிசிசிஐ உள்ளிட்டவற்றின் நிர்வாக பொறுப்பிற்கு சிலர் தகுதி பெறமாட்டர்கள் என்று ஒரு விதி உள்ளது. அதில் குறிப்பாக ஒரு மாநிலத்தின் அமைச்சர் அல்லது அரசாங்க ஊழியர் அல்லது பொதுப் பணி வகிக்கும் நபர் ஆகியவர்கள் இந்தப் பதவிகளுக்கு தகுதி பெறமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது எம்.எல்,ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இந்தப் பதவிக்கு தகுதி பெறமாட்டார் என்று கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய தலைவர் ராஜினாமா செய்துள்ள நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவரான அசோக் சிகாமணி தலைமையில் 45 நாட்களில் புதிய கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் தற்காலிக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருதப்படுகிறது. தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 2022ஆம் ஆண்டு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. அசோக் சிகாமணி தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியான அறிவிப்பில், “தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா குருநாத் தற்போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தொழில்துறையில் கவனம் செலுத்த உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவருடைய பதவிகாலத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவர் யார்?- ரூபா குருநாத் ராஜினாமா