Rupa Gurunath Resigns: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவர் யார்?- ரூபா குருநாத் ராஜினாமா
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் 2019ஆம் ஆண்டு பதவியேற்றார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று திடீரென அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, “தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா குருநாத் தற்போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தொழில்துறையில் கவனம் செலுத்த உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவருடைய பதவிகாலத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டது.
குறிப்பாக 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் கொரோனா பரவல் இருந்த சூழலிலும் சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை அவர் தலைமையில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அத்துடன் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற போட்டிகளும் சென்னையில் சிறப்பாக எந்தவித தடையும் இன்றி நடத்தி முடிக்கப்பட்டது. இவற்றுடன் சேர்த்து 2021ஆம் ஆண்டில் வெற்றிகரமாக தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரும் சிறப்பாக நடத்தபட்டது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதுகுறித்து ரூபா குருநாத்,”தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நான் பணியாற்ற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பணியாற்றியதை நான் பெரிய கௌரவமாக கருதுகிறேன். இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைத்து நபர்களுக்கும் என்னுடைய நன்றி” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய அடுத்த முயற்சிகள் சிறப்பான வெற்றி அடைய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
ரூபா குருநாத் தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார். அவர் இனிமேல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை பார்த்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய தந்தையான ஶ்ரீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 2002ஆம் ஆண்டு பதவி வகித்தார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராகவும் பதவி வகித்தார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. ரூபா குருநாத் திடீரென பதவி விலகியுள்ள சூழலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவர் யார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: ஸ்பீடு ஸ்பீடு... அசுரன் பூம் பூம் பும்ராவின் லேட்டஸ்ட் சாதனை..