Hardik Pandya: மீண்டும் கேப்டன் ஆகும் ஹர்திக்..? ரோகித்திற்கு என்னாச்சு..? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நீக்கிய ட்வீட்டால் பரபரப்பு..
இலங்கை அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் ரோகித்திற்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Hardik Pandya: மீண்டும் கேப்டன் ஆகும் ஹர்திக்..? ரோகித்திற்கு என்னாச்சு..? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நீக்கிய ட்வீட்டால் பரபரப்பு.. Star Sports deletes promo indicating Hardik Pandya as India captain for Sri Lanka T20Is after backlash Hardik Pandya: மீண்டும் கேப்டன் ஆகும் ஹர்திக்..? ரோகித்திற்கு என்னாச்சு..? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நீக்கிய ட்வீட்டால் பரபரப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/16/905a54ce84ff559d36837c748e121d0e1671198692169127_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது. இதைதொடர்ந்து, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டீ-20 தொடரில் பங்கேற்க உள்ளது. வரும் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி-20 போட்டிகள் நடைபெற உள்ளன. அதைதொடர்ந்து, ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில், ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.
ரோகித் சர்மா காயம்:
டாக்காவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த ஒருநாள் தொடரிலிருந்து பாதியில் வெளியேறிய ரோகித் சர்மா, டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை. பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் முழுமையாக அவர் குணமடையாததால், இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
— The Game Changer (@TheGame_26) December 25, 2022
ஹர்திக் பாண்ட்யா கேப்டன்:
இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் ரோகித் சர்மா பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துவார் என்பது போன்ற வீடியோவை, இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பும் ஒப்பந்தங்களை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
ஆனால், ரசிகர்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியதும் அந்த வீடியோவை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. ஏற்கனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டதோடு, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 1-0 என கைப்பற்றியது. நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி கோப்பையையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுகிறது இந்திய அணி:
கலைக்கப்பட்ட சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தனது கடைசி பணியாக, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 இந்திய அணியை அறிவிக்க உள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் வரும் செவ்வாயன்று நடைபெற உள்ளது. அப்போது, காயமடைந்த ரோகித் சர்மாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, டீ-20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என கருதப்படுகிறது.
கோலி, கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு, டி-20 தொடரில் ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹர்திக் பாண்ட்யா தலைமையில், இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணி களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், ஜனவரி 10ம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடரில், காயத்தில் இருந்து குணமடைந்து வரும் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)