Metro Train Accident: மெட்ரோ ரயில் பயணிகளே உஷார்..! கதவில் சேலை சிக்கியதால் தண்டவாளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு
Delhi Metro Train Accident: மெட்ரோ ரயிலின் கதவில் சேலை சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில், பெண் உயிரிழந்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Metro Train Accident: டெல்லி மெட்ரோ ரயிலின் கதவில் சேலை சிக்கியதில், 35 வயதான ரீனா என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார்.
டெல்லி மெட்ரோ ரயில் விபத்து:
டெல்லியை சேர்ந்த வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியை சேர்ந்த ரீனா கடந்த வியாழனன்று, தனது மகனுடன் இண்டர்லாக் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ரயிலில் ஏறிய பிறகு தான், தனது மகன் ரயிலில் ஏறாததை ரீனா கவனித்துள்ளார். இதையடுத்து உடனடியாக ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளார். அந்த நேரம் பார்த்து ரயிலின் கதவுகள் மூடியதில், அவற்றின் இடையே ரீனாவின் சேலை சிக்கிக் கொண்டது. உடனடியாக சேலையை வெளியே இழுக்க முயன்றும் ரீனாவின் முயற்சிகள் தோல்வியுற்றுன. இதற்கிடையே, ரயில் புறப்பட்டு நகர்ந்ததில் அவர் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் நிலைதடுமாறி விழுந்த அவர், தண்டவாளத்திற்குள் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவர் மீது மெட்ரோ ரயில் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
விபத்தில் படுகாயமடைந்த ரீனா அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அடுத்தடுத்து 3 மருத்துவமனைகளும் பல்வேறு காரணங்களை கூறி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது. இறுதியில் டெல்லி சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் ரீனா அனுமதிக்கப்பட்டார். விபத்தில் ரீனாவிற்கு தலை மற்றும் உடல் பகுதியில் அதிதீவிரமான காயங்கள் இருந்த நிலையயில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரீனா இன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லி மெட்ரோ ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ரீனா?
வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியில் வசித்து வந்த 35 வயதான ரீனா ஏற்கனவே கணவரை இழந்து, 12 வயதான மகள் மற்றும் 10 வயதான மகனுடன் வசித்து வந்தார். காய்கறி விற்பனை செய்து தனது குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். இந்நிலையில் தான், விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இதனால், அவரது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தானியங்கி கதவுகளின் செயல்பாட்டை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.