Sanju Samson: தென்னாப்ரிக்காவை பொளந்து கட்டி சஞ்சு சாம்சன் சதம் - ரோகித், சூர்யகுமார் சாதனைகள் முறியடிப்பு
Sanju Samson: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் விளாசியதன் மூலம், சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
Sanju Samson: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம், சஞ்சு சாம்சன் படைத்த சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சஞ்சு சாம்சன் அதிரடி சதம்:
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக டர்பனில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில், இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மேலும், 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதோடு, அவர் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் முறியடித்த சாதனைகள்:
- ஆடவர் டி20 போட்டிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த நான்காவது சர்வதே மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் இவர் சதம் விளாசி இருந்தார்.இந்த பட்டியலில் பிரான்சின் குஸ்டாவ் மெக்கியோன், தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோசோவ் மற்றும் இங்கிலாந்தின் பில் சால்ட் ஆகியோரும் உள்ளனர்.
- டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆடவர் டி20 போட்டிகளில் இந்திய வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை சஞ்சு சாம்சன் அடைந்துள்ளார். முன்னதாக, 2015 ஆம் ஆண்டு தர்மசாலாவில் நடந்த போட்டியில் 106 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
- சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்க மண்ணில் ஆடவர் டி20 போட்டிகளில் அதிக தனிநபர் ஸ்கோரை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் கடந்த டிசம்பரில் 100 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை படைத்திருந்தார்.
- சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆடவர் டி20 போட்டிகளில் நான்காவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்துள்ளார். பாபர் அசாம் (122), ஜான்சன் சார்லஸ் (118), கிறிஸ் கெய்ல் (117) ஆகியோர் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
- சஞ்சு சாம்சன் ராபின் உத்தப்பாவுடன் இணைந்து டி20 போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்த ஏழாவது அதிவேக இந்திய வீரர் ஆனார். அவர் தனது 269வது இன்னிங்ஸில் மைல்கல்லை எட்டினார்.
டி20 போட்டிகளில் அதிரடி காட்டி வரும் சஞ்சு சாம்சனை, வரும் 2026ம் ஆண்டு உலகக் கோப்பை வரையிலும் தொடர்ந்து ஆட்டநாயகனாக களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.