Rohit Sharma Record: உலகக்கோப்பையில் 50 சிக்ஸர்கள்! புதிய வரலாறு படைத்த ஹிட் மேன் ரோகித்சர்மா!
Most Sixes in World Cup History: ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற புதிய வரலாறை இந்திய கேப்டன் ரோகித்சர்மா படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முதல் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்யும் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிக்ஸர், பவுண்டரிகள் விளாசி வருகிறார். இந்த நிலையில், இந்த போட்டியில் அவர் சிக்ஸர் அடிக்கும்போது உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் என்ற மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அவர் 50வது சிக்ஸரை அடித்து அசத்தியுள்ளார்.
50 சிக்ஸர்கள்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித்சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பேட்டிங்கைத் தேர்வு செய்தது முதல் களமிறங்கிய ரோகித்சர்மா இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் அதிரடியாகவே ஆடினார்.
அவரது அதிரடியால் இந்திய அணி ஸ்கோர் மளமளவென எகிறியது. இந்த போட்டியில் தொடர்ந்து சிக்ஸர்கள், பவுண்டரிகளை விளாசிய ரோகித்சர்மா போட்டியில் 2வது சிக்ஸரை விளாசியபோது ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் தன்னுடைய 50வது சிக்ஸரை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இதுவரை அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள், அதிவேக 1500 ரன்கள்:
கெயில் 49 சிக்ஸர்களுடன் தற்போது 2வது இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவிலியர்ஸ் 37 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 31 சிக்ஸர்கள் விளாசி 4வது இடத்தில் உள்ளார். ப்ரெண்டன் மெக்கல்லம் 29 சிக்ஸர்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.
ஒரே உலகக்கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோகித்சர்மா படைத்துள்ளார். மேலும், உலகக்கோப்பைத் தொடரில் அதிவேகமாக 1500 ரன்களை ரோகித்சர்மா கடந்துள்ளார். இந்திய அணிக்காக அபாரமாக ஆடிய கேப்டன் ரோகித்சர்மா சௌதீ பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மேலும் படிக்க: IND vs NZ Semi Final LIVE: நியூசிலாந்தை சின்னாபின்னமாக்கும் இந்தியா; வான்கடேவில் வானவேடிக்கை..!
மேலும் படிக்க: IND vs NZ Semi-Final: பேட்டிங் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்த ரோஹித்.. நியூசிலாந்திடம் எடுபடுமா பேட்டிங் வியூகம்..!