Rohit & Virat: ரோஹித்தும், கோலியும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? இந்தாண்டு விளையாடுவதில் சிக்கல்..!
இது நடந்தால், 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி விராட் மற்றும் ரோஹித்தின் கேரியரின் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம்.
2023 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் டாப் 3 பட்டியலில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்த இடத்தை பிடித்திருந்தனர். சமீபத்தில் முடிவடைந்த 2023 உலகக் கோப்பையில் இருவரும் போட்டிபோட்டு மாறி மாறி அதிக ரன்கள் எடுத்தனர். இந்த ஒருநாள் ஃபார்மட்டில் இந்த இரண்டு அனுபவ பேட்ஸ்மேன்களும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதுதான் சிறப்பு. இருப்பினும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் செயல்திறன் சிறப்பாக இருந்தபோதிலும், இந்த இரண்டு ஜாம்பவான்களும் இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.
ஏன் இருவரும் விளையாட முடியாது..?
2024 ஆண்டு முழுவதும் ஒரே ஒரு ஒருநாள் தொடரில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடரிலும் இந்திய அணி மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடும். இந்தாண்டு பெரும்பாலும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே பிஸியாக இருக்கும். இந்த ஆண்டு மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி, 9 டி20 போட்டிகளுடன் டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்கிறது. இந்த மாதிரி அட்டவணையைப் பார்க்கும்போது, ரோஹித்தும், விராட்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது உறுதியாகிவிட்டது. மேலும், இந்த அனுபவ பேட்ஸ்மேன்கள் 2024 டி20 உலகக் கோப்பையிலும் விளையாடுவார்கள். இவ்வாறான நிலையில் இவ்வருடம் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா பங்கேற்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே என்றே கூறலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய அணியின் பல்வேறு நாடுகளில் பல்வேறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதிலும், பெரும்பாலான போட்டிகளில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ ஓய்வு மட்டுமே கொடுத்தது. அதேபோல், இந்தாண்டு நடைபெறும் ஒருநாள் தொடரிலும் பிசிசிஐ இருவருக்கும் ஓய்வு கொடுத்தால், விராட்- ரோஹித் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமலேயே போய்விடுவார்கள்.
2025ல் எப்படி..?
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வருகின்ற 2025 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டி விளையாடுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. 2024 ஆம் ஆண்டில், இந்த இரண்டு ஜாம்பவான்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போகலாம். இதற்குப் பிறகு, இந்த இருவரின் ஃபார்மைப் பொறுத்தே அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்வார்களா..? இல்லையா..? என்பது தெரியும். கிட்டத்தட்ட இருவரும் 35 வயதை கடந்துவிட்டனர். மேலும், எதிர்காலத்தில் இந்திய அணியில் இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆதிக்கத்தை கருத்தில் கொண்டு, இருவரும் 2025 ஆம் ஆண்டில் ஒருநாள் அணியில் இடம் பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இருவரையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட வைக்க பிசிசிஐ ஒரு ஃபார்முலாவைக் கண்டுபிடிக்கலாம். அடுத்தடுத்த தொடர், லீக் மற்றும் ஐசிசி போட்டிகளை மையமாக கொண்டு பல நாடுகளின் வாரியங்கள் ஒவ்வொரு வடிவத்திற்கும் முற்றிலும் மாறுபட்ட அணிகளை உருவாக்கி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், பிசிசிஐயும் அதே போக்கை பின்பற்றலாம்.
இது நடந்தால், 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி விராட் மற்றும் ரோஹித்தின் கேரியரின் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம். இருவருமே ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது ஜாம்பவான்களாக திகழ்கின்றன. இந்த வடிவத்தில் இருவரும் தலா 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.