சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் மூத்த வீரர்கள்: மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சாதனையை தொடர்ந்து மூத்த வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். முதலில் விராட் கோலியும் ரோகித் சர்மாவை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஓய்வை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், "இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன்.
ஓய்வை அறிவித்த ஜடேஜா: உறுதியான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். மற்ற வடிவங்களில் அதைத் தொடர்ந்து செய்வேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு நனவாகும். இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
இதுவரை, 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 515 ரன்களை எடுத்துள்ளார். 54 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ஜடேஜாவின் ஓய்வு இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
View this post on Instagram