Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: நடப்பாண்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆளுங்கட்சியான திமுக, கட்சி நிர்வாகிகளால் எதிர்கொண்ட பெரும் சர்ச்சைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
![Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..! Year Ender 2024 dmk headed by cm stalin face controversy over drug kallakurichi liquor bsp chief murder tamilnadu check list Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/27/7f0425a3ab5aabbdc6183764bb4e0bd91735282155575732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Year Ender 2024: நடப்பாண்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆளுங்கட்சியான திமுக எதிர்கொண்ட பெரும் சர்ச்சைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சர்ச்சைகள் நிறைந்த 2024ம் ஆண்டு
அரசியல் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாத தமிழ்நாட்டிற்கு, 2024ம் ஆண்டும் விதிவிலக்கல்ல. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் தாண்டி, திமுக நிர்வாகிகள் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான சம்பவங்களே அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியது. முந்தைய திமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவை பரவலான குற்றச்சாட்டுகளாக இருக்கும். ஆனால், நடப்பாண்டில் அவை அனைத்தையும் தாண்டி, போதைப்பொருட்கள் திமுகவிற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. காரணம் நிகழும் குற்றங்களில் பெரும்பாலானவற்றிற்கு போதைப்பொருள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதே ஆகும். அந்த வகையில் நடப்பாண்டில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்கொண்ட பிரதான சர்ச்சைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2024ல் திமுகவை உலுக்கிய சம்பவங்கள்:
1. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் படுகொலை:
நடப்பாண்டில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய சம்பவம், சென்னையில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்டதாகும். அதுவரை தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளே குற்றம்சாட்டி வந்தன. ஆனால், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே குற்றம்சாட்டியது. அதோடு, கட்சி பாகுபாடின்றி திமுக, அதிமுக, பாஜக என பல்வேறு கட்சி பிரமுகர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருந்தது விசாரணையில் அம்பலமானது. இது திமுகவிற்கு பெரும் கரும்புள்ளியாக மாறியது.
2. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் - 66 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கருணாபுரம், மாதவ சேரி சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 229 பேர், கடந்த ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், தேசிய அளவில் பேசுபொருளானது. இந்த வழக்கிலும் திமுகவைச் சேர்ந்தவர்களும் கைதாகினர். அதோடு, கள்ளச்சாராயத்தை தடுக்க திமுக தவறிவிட்டதாகவும், போதை மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடின.
3. ஜாஃபர் சாதிக் கைது
வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாக தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திமுக நிதி பெற்றதாகவும், தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதிற்கு திமுகவே காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் களமாடின.
4. அண்ணா பல்கலை., மாணவிக்கு பாலியல் தொல்லை
தமிழ்நாட்டையே கொந்தளிக்க செய்யும் விதமாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவிக்கு வெளிநபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கும் மேலாக பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர்., நகல் கசிந்து பெரும் சர்ச்சை வெடித்தது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ, பயமில்லாத சூழலையே இந்த நிகழ்வு காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விளாசின. மேலும், சட்ட-ஒழுங்கு என்பது தமிழ்நாட்டில் காணாமல் போய்விட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதில் கைதானவரும் திமுக பிரமுகரே என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகிறது. ஆனால், அவர் திமுக உறுப்பினர் கிடையாது என அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
5. திமுக எம்.எல்.ஏ., மகன் கைது
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., இ.கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டனர். சமூக நீதி மற்றும் சமத்துவம் பேசும் திமுகவைச் சேர்ந்த, எம்.எல்.ஏவின் மகனே செய்த இந்த செயல் கடும் விமர்சனங்களுக்காளானது. ஆனால், எனக்கும், எனது மகனின் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக தொடர்பு ஏதும் இல்லை என, எம்.எல்.ஏ., கருணாநிதி விளக்கமளித்தார்.
6. இர்ஃபான், மகா விஷ்ணு சர்ச்சை
மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் அறிவித்தது, குழந்தை பிறந்தபோது தொப்புள் கொடியை தானே நறுக்கியது போன்ற வீடியோக்களை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் சர்ச்சையில் சிக்கினார். சட்டவிரோதமான செயல்களாக அறிவிக்கப்பட்டாலும், அவர் மீது வலுவான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. திமுக உடனான அவரது நெருக்கம் காரணமாகவே, இர்ஃபான் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது.
அரசுப்பள்ளியில் மதபோதனை நடத்தியதோடு, அரசு ஆசிரியரையும் அவமானப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட மகா விஷ்ணு, திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பெரும் பேசுபொருளானதும் குறிப்பிடத்தக்கது.
7. போதைப்பொருள் - மாணவர்கள், நடிகர்கள் கைது
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதனை மெய்பிக்கும் விதமாக தினசரி பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், சீரியல் நடிகர்கள், மன்சூர் அலிகானின் மகன் கூட போதைப்பொருள் கடத்தியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கொலை மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு மது போதையும் பிரதான காரணமாக உள்ளது. ஆனால், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக நிலவுகிறது.
மேற்குறிப்பிடப்பட்டவை அனைத்தும் மாநில அளவில் பேசுபொருளாகிய மாறிய, திமுக நிர்வாகிகள் தொடர்புடைய குற்றச்சம்பவங்களாகும். இதுபோக, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பல குற்றச்சம்பவங்களும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன. குறிப்பாக இந்த திமுக ஆட்சிக்கு போதைப்பொருள் என்பது, கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தின் போது தாக்கத்தை ஏற்படுத்திய மின்வெட்டுக்கு நிகராக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)