ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers 2024: சிஏ இரண்டு குரூப் தேர்வுகளிலும் 13.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 11,500 பேர் இந்த ஆண்டு ஆடிட்டர் பணிக்குத் தேர்வாகி உள்ளனர்.
ஆடிட்டர் ஆக எழுத வேண்டிய சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டு குரூப் தேர்வுகளிலும் 13.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 11,500 பேர் இந்த ஆண்டு ஆடிட்டர் பணிக்குத் தேர்வாகி உள்ளனர்.
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக விரும்பும் மாணவர்கள், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இவர்களுக்கு, முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் தேர்வு நடக்கும்.
தேர்வு நடந்தது எப்போது?
இந்த நிலையில், சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 3 முதல் 14ஆம் தேதி வரை நடந்து முடிந்தன. குறிப்பாக குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தன. அதேபோல குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 9, 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. தேர்வர்கள், icai.nic.in அல்லது icai.org என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். 66,987 பேர் குரூப் 1 இறுதித் தேர்வை எழுதிய நிலையில் 11,253 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல குரூப் 2 இறுதித் தேர்வை 49,459 பேர் எழுதி இருந்த நிலையில், 10,566 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 1 தேர்ச்சி விகிதம் 16.8 ஆகவும் குரூப் 2 தேர்ச்சி விகிதம் 21.36 ஆகவும் உள்ளது. இரண்டு குரூப்பிலும் 13.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 11,500 பேர் ஆடிட்டர் பணிக்குத் தேர்வாகி உள்ளனர்.
யார் முதலிடம்?
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹெராம்ப் மகேஸ்வரி மற்றும் திருப்பதியைச் சேர்ந்த ரிஷப் ஒஸ்ட்வால் ஆகிய இருவரும் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இவர்கள் 508 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இது 84.67 சதவீத மதிப்பெண் ஆகும். அதேபோல 501 மதிப்பெண்களைப் பெற்று அகமதாபாத்தைச் சேர்ந்த ரியா குஞ்சன் குமார் ஷா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 83.5 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். தொடர்ந்து கொல்கத்தாவைச் சேர்ந்த கிஞ்சல் அஜ்மேரா, 493 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
அதிகரித்த தேர்ச்சி விகிதம்
2023-ல் 65,294 தேர்வர்கள் குரூப் 1 தேர்வை எழுதி இருந்த நிலையில், 6,176 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது தேர்ச்சி விகிதத்தை 9.46 ஆக நிர்ணயித்து இருந்தது. இந்த ஆண்டு இந்த விகிதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.