500 Test Wickets: அதிவேக 500 விக்கெட்! முரளிதரனுக்கு அடுத்து நம்ம அஸ்வின்தான் - பட்டியலை பாருங்க!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை கடந்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
அஸ்வின் 500 விக்கெட்டுகள்:
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் படி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் சாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவ்வாறாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை கடந்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
அதிவேக டெஸ்ட் விக்கெட்டுகள்:
முத்தையா முரளிதரன்:
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அதாவது தன்னுடைய 87 வது டெஸ்ட் இன்னிங்ஸிலேயே அவர் 500 வது விக்கெட்டை எடுத்து விட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் முத்தையா முரளிதரன் இந்த சாதனையை படைத்தார். இவரது பந்தில் 500 வது விக்கெட்டை பறிகொடுத்தவர் ஆஸ்திரேலிய அணி வீரர் மைக்கேல் காஸ்ப்ரோவிச் ஆவார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
இந்த பட்டியலில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தன்னுடைய 98 வது டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அதன்படி, அஸ்வின் சுழலில் 500 வது விக்கெட்டுக்கு இரையானவர் இங்கிலாந்து அணி வீரர் சாக் கிராலி.
அனில் கும்ப்ளே:
அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. இவர் தான் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மொகாலியில் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் கும்ப்ளே இந்த சாதனையை படைத்தார். அதன்படி படி 105 வது டெஸ்டில் கும்ப்ளே கைப்பற்றிய 500 வது விக்கெட் இங்கிலாந்து அணி வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் உடையது.
ஷேன் வார்ன்:
அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணி வீரர் ஷேன் வார்ன். தான் விளையாடிய 108 வது டெஸ்ட் இன்னிங்ஸில் தான் ஷேன் வார்ன் இந்த சாதனையை படைத்தார். அதன்படி, கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹஷான் திலகரத்னாவை வீழ்த்தியதன் மூலம் தன்னுடைய 500 வது விக்கெட்டை பதிவு செய்தார் ஷேன் வார்ன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:
Player |
Team |
Matches |
Date |
Time since debut |
முத்தையா முரளிதரன் |
இலங்கை |
87 |
மார்ச் 16, 2004 |
11 வருடங்கள் 201 நாட்கள் |
ரவிச்சந்திரன் அஸ்வின் |
இந்தியா |
98 |
பிப்ரவரி 16, 2024 |
12 வருடங்கள் 102 நாட்கள் |
அனில் கும்ப்ளே |
இந்தியா |
105 |
மார்ச் 9, 2006 |
15 வருடங்கள் 212 நாட்கள் |
ஷேன் வார்ன் |
ஆஸ்திரேலியா |
108 |
மார்ச் 8, 2004 |
12 வருடங்கள் 66 நாட்கள் |
கிளென் மெக்ராத் |
ஆஸ்திரேலியா |
110 |
ஜூலை 21, 2005 |
11 வருடங்கள் 251 நாட்கள் |
கோர்ட்னி வால்ஷ் |
வெஸ்ட் இண்டீஸ் |
129 |
மார்ச் 17, 2001 |
16 வருடம் 128 நாட்கள் |
ஜேம்ஸ் ஆண்டர்சன் |
இங்கிலாந்து |
129 |
செப்டம்பர் 7, 2017 |
14 வருடம் 108 நாட்கள் |
ஸ்டூவர்ட் பிராட் |
இங்கிலாந்து |
140 |
ஜூலை 24, 2020 |
12 வருடங்கள் 228 நாட்கள் |