Virat Test Captaincy: விராட்கோலி கேப்டனாக 50-60 வெற்றிகள் பெறுவதை, சிலரால் ஜீரணிக்க முடியவில்லை - ரவிசாஸ்திரி
விராட்கோலி கேப்டனாக இருந்திருந்தால் 50-60 வெற்றிகளை பெற்றிருப்பார். ஆனால், சிலரால் அதை ஜீரணிக்க முடியவில்லை என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததுடன், ஒருநாள் போட்டித்தொடரையும் 0-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் விளையாடி விதம், இந்திய அணியின் ஆட்டத்திறன் இவற்றை எல்லாம் காட்டிலும் விராட்கோலி தனது டெஸ்ட் கேப்டன்சியை ராஜினாமா செய்ததே அனைவராலும் பேசப்பட்டது.
விராட்கோலி டெஸ்ட் கேப்டன்சியை ராஜினாமா செய்தது குறித்து, முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருப்பதாவது, “ விராட்கோலியால் இந்திய டெஸ்ட் அணியை தொடர்ந்து வழிநடத்த முடியுமா? என்று கேட்டால் நிச்சயம் முடியும். அவரால் இன்னும் 2 ஆண்டுகள் இந்திய அணியை வழிநடத்தியிருக்க முடியும். ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்திய அணி உள்நாடுகளில்தான் டெஸ்ட் போட்டிகள் ஆட உள்ளது. அப்படி விளையாடும்போது விராட்கோலி தலைமையில் இந்திய அணி 50 முதல் 60 டெஸ்ட் வெற்றிகளை பெற்றிருக்கும். ஆனால், பலரால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
இரண்டு ஆண்டுகள் அவர் கேப்டனாக தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். வேறு எந்த நாட்டிலும் இந்த சாதனை நம்ப முடியாதது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்திற்கு எதிராக வெற்றி பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். ஆனால், விராட்கோலி கேப்டனாக வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.”
விராட்கோலி இந்திய அணியை 5 முதல் 6 ஆண்டுகள் வழிநடத்தினார். அதில் 5 ஆண்டுகள் இந்தியா நம்பர் 1 அணியாக வலம் வந்தது. வேறு எந்த இந்திய கேப்டனும் இத்தகைய சாதனைகளை கொண்டிருக்கவில்லை. மிகவும் சில கேப்டன்கள் மட்டுமே இத்தகைய சாதனைகளை தங்கள் கைவசம் கொண்டுள்ளனர். ஒரு வெற்றிகரமான கேப்டன் தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறுகிறார் என்றால், அது அவரது தனிப்பட்ட முடிவு. அவரது 40 வெற்றிகள் என்பது முன்னோடியில்லாதது.
கேப்டன்சியை எந்தளவு ரசித்து ஆடினார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். சச்சின் டெண்டுல்கர் எம்.எஸ்.தோனி விலகும்போது கேப்டன்சியை ரசிக்கவில்லை. விராட்கோலி தற்போது தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறார். சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் தங்களது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சியை ராஜினாமா செய்தனர்.”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்