மெல்போர்னில் சுமார் ரூ.165 கோடிக்கு பாண்டிங் வாங்கிய சொகுசு மாளிகை… உள்ளேயே நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட்!
இந்த வீடு, நவீன சமையலறையுடன், பளிங்கு மேல் சமையலறை மேற்பரப்புகளை உள்ளடக்கியது. இந்த வீட்டில் உள்ள படிகள் இரும்பில் செய்யப்பட்டுள்ளன. உள்ளேயே டென்னிஸ் கோர்ட், ஸ்விம்மிங் பூல் ஆகியவை உள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், மெல்போர்னின் புறநகர் பகுதியான டூரக்கில் உள்ள ஒரு மாளிகையை 20 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.
என்னென்ன வசதிகள் உள்ளன?
ஆஸ்திரேலிய ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த மாளிகை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சொத்து $19 மில்லியன் முதல் $20.6 மில்லியன் வரையிலான விலையில் பட்டியலிடப்பட்டது, ஆனால் ரிக்கி பாண்டிங் இதனை $20.75 மில்லியனுக்கு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு 165 கோடியை தாண்டுகிறது. தி ஏஜ் கூற்றின்படி, மெல்போர்னில் உள்ள மிகவும் பிரத்யேகமான பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள இந்த வீடு, 1400 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது, அதாவது சுமார் 15,070 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு, நவீன சமையலறையுடன், பளிங்கு மேல் சமையலறை மேற்பரப்புகளை உள்ளடக்கியது. இந்த வீட்டில் உள்ள படிகள் இரும்பில் செய்யப்பட்டுள்ளன. உள்ளேயே டென்னிஸ் கோர்ட், நீச்சல் குளம் ஆகியவை உள்ளன.
பாண்டிங்கின் மாளிகைகள்
பாண்டிங் வாங்கும் முதல் பெரிய மாளிகை அல்ல இது, ஏற்கனவே 2013 இல் $9.2 மில்லியனுக்கு பிரைட்டனின் கடற்கரை புறநகரில் வாங்கிய, அவரது குடும்பம் மற்றொரு மாளிகையை வைத்திருக்கிறது. பிரைட்டனின் "கோல்டன் மைல்" என்று அழைக்கப்படும் அந்த மாளிகையில் ஏழு படுக்கையறைகள், எட்டு குளியலறைகள், ஒரு உள் தியேட்டர் மற்றும் கடற்கரைக்கு செல்லும் பிரைவேட் பாதை ஆகியவை அடங்கும். அவர்கள் 2019 இல் $3.5 மில்லியன் மதிப்பிலான நான்கு படுக்கையறைகள், மூன்று குளியலறைகள் கொண்ட போர்ட்சீ வீட்டையும் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிங் சாதனைகள்
ஆஸ்திரேலியா அணியில் இருக்கும்போது மூன்று முறை உலகக் கோப்பை வென்றவர், அதில் இரண்டு கேப்டனாக வென்றவர், ரிக்கி பாண்டிங். சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் இவர். 2000-களின் நடுப்பகுதியில் ஆஸ்திரேலியாவின் "பொற்காலத்தின்" போது அவர் தலைமை தாங்கினார், ஸ்டீவ் வாகிடம் இருந்து கேப்டன்சியை எடுத்து வெற்றிகரமாக நடத்தி சென்றார். டெஸ்ட் மற்றும் ODIகளில் ஆஸ்திரேலியாவின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை கொண்டவர். எல்லா காலத்திலும் சிறந்த பேட்டர்களில் ஒருவராக பரவலாக மதிப்பிடப்பட்ட பாண்டிங், 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களுடன் 51.85 சராசரியுடன் 13,378 ரன்கள் எடுத்தார். 374 ஒருநாள் போட்டிகளில், பாண்டிங் 29 சதங்களுடன் 41.81 சராசரியில் 13,589 ரன்கள் எடுத்தார்.
உடல்நலக் குறைவு
நவம்பர் 2012 இல் ஓய்வு பெற்றதிலிருந்து, பாண்டிங் தனது வர்ணனைக்காகப் புகழ் பெற்றதைத் தவிர, பயிற்சியாளராகவும் வெற்றியை அனுபவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக வெல்வதற்கு உதவியவர், மேலும் அவ்வப்போது ஆஸ்திரேலிய அணிக்கு பல்வேறு நிலைகளில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பாண்டிங் இருந்து வருகிறார். 2022 டிசம்பரில், பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வர்ணனைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தபோது, பாண்டிங்கிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிரமான நோயில் இருந்து விடுபட்டார், பின்னர் விமானத்தில் இருந்தபோது அவருக்கு மார்பில் வலி ஏற்பட்டதாகக் கூறினார். தற்போது நலமாக உள்ள அவர் இந்த சீசனில் ரிஷப் பந்த் இல்லாத டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.