Pak Vs AFG World Cup 2023: சென்னையில் ஆப்கானிஸ்தான் உடன் மோதல்! ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பாகிஸ்தான்?
Pak Vs AFG World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Pak Vs AFG World Cup 2023: சென்னையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 22வது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல்:
சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய முதல் 4 லீக் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் மல்லுக்கட்டுகின்றன.
பலம் & பலவீனங்கள்:
பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கேப்டன் பாபர் அசாமின் ஃபார்ம் அணிக்கு தலைவலியாக மாறியுள்ளது. ரிஸ்வான் மட்டுமே தொடர்ந்து நிலையான ஆட்டத்த வெளிப்படுத்தி வருகிறார். உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பினும், நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு அது சாதகமாக அமையவில்லை என்பதே உண்மை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் எக்ஸ்ட்ராக்களாக ரன்களை வாரி வழங்கினர். அதோடு, வழக்கம்போல் ஃபில்டிங்கிலும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மறுமுனையில் சுழற்பந்துவீச்சை முதன்மையான ஆயுதமாக கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. சுழலுக்கு சாதகமான சென்னையில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அது நிகழ வாய்ப்புள்ளது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அத்தனை முறையும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
சென்னை சிதம்பரம் மைதானம் நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரம் ஸ்பின்னர்களும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம். டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே விரும்புகின்றன.
உத்தேச அணி விவரங்கள்:
பாகிஸ்தான்: சவுத் ஷகீல் , பாபர் அசாம் (கேப்டன்) , அப்துல்லா ஷபிக் , IU ஹக் , இப்திகார் அகமது , முகமது நவாஸ் , முகமது ரிஸ்வான் , அஃப்ரிடி , உசமா மிர் , ஹாரிஸ் ராஃப் , ஹசன் அலி
ஆப்கானிஸ்தான்:
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்) , இப்ராஹிம் சத்ரான் , ஆர் ஷா, முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஐஏ கில், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ரஷித் கான், நவீன் உல் ஹக், முஜீப் உர்மான்