PAK vs SA: உலகக்கோப்பை தொடர் தோல்வி.. தென்னாப்பிரிக்காவுக்கு பயம் காட்டும் பாகிஸ்தான்! ரெக்கார்ட் இதுதான்!
இதற்கு முன் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதியுள்ளன. அதில் ஒன்றில் இரண்டாவது பேட்டிங்கும், இரண்டில் முதல் பேட்டிங்கும் ஆடி வெற்றியை பதிவு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் விளையாடிய நிலையில் மழை குறுக்கிட்டு பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவிடம் டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தான் தோற்றதே இல்லை என்னும் சாதனையை தக்கவைத்துக் கொண்டது.
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் போட்டி
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் 6 ரன்னிலும், ரிஸ்வான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 28 ரன்களுக்கு அவுட்டாக அந்த அணி ரன்கள் குவிக்க தடுமாறி வந்த நிலையில் இப்திகார்- ஷதாப் கான் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இப்திகார் அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய ஷதாப் கான் வெறும் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஷாதாப் 22 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்க்கியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
186 ரன்கள் இலக்கு
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி மழை வரும் என்று எதிர்பார்த்தே இறங்கியது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டி காக் டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில் அவரை தொடர்ந்து வந்த ரோசோவ் 7 ரன்களில் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மார்க்ரம் - பவுமா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டது. ஆனால் கூடிய விரைவிலேயே இந்த ஜோடியை ஷதாப் கான் பிரித்தார்.
குறுக்கிட்ட மழை
பவுமா 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மார்க்ரம் 20 ரன்களில் அவுட்டானதால், தென் ஆப்பிரிக்கா அணி 9 ஓவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது 14 ஓவர்களில் 142 ரன்கள் இலக்காக மாற்றி அமைக்கப்பட, தென் ஆப்பிரிக்க அணி மீதமுள்ள 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்கை துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைந்தது.
தோற்காத பாகிஸ்தான்
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவிடம் டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தான் தோற்றதே இல்லை என்னும் சாதனையை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு முன் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதியுள்ளன. அதில் ஒன்றில் இரண்டாவது பேட்டிங்கும், இரண்டில் முதல் பேட்டிங்கும் ஆடி வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்றோடு நான்காவது முறையாக பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. இதற்கு முன் 2009 உலகக்கோப்பை போட்டியில் நேருக்கு நேர் மோதியபோது, பாகிஸ்தான் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2010 உலகக்கோப்பையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2012 உலகக்கோப்பை போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் பிறகு 10 வருடம் கழித்து நேற்றுதான் இரு அணிகக்கும் உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோதின, அதிலும் பாகிஸ்தான் அணி வென்று சாதனையை தக்கவைத்துக் கொண்டது.