மேலும் அறிய
Advertisement
மீண்டும் ஒரு இறுதிப்போட்டி...சையத் முஷ்தாக் அலி தொடரில் அசத்தும் தமிழ்நாடு!
காலிறுதியில் கேரளாவை எதிர்கொண்ட தமிழ்நாடு அந்த போட்டியையும் சிறப்பாக வென்று அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்தாக் அலி தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி தமிழ்நாடு அணி மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது.
2006-07 சமயத்திலிருந்தே நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் சீசனிலேயே தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணியே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதன்பிறகு, கடைசி இரண்டு சீசன்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. 2019 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் கர்நாடகா அணிக்கு எதிராக வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது. கடைசி சீசனில் சிறப்பாக ஆடிய தமிழ்நாடு அணி இறுதிப்போட்டியில் பரோடாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருந்தது. கடந்த சீசனிலும் தினேஷ் கார்த்திக்கே கேப்டனாக இருந்தார்.
நடப்பு சாம்பியனாக இந்த சீசனுக்குள் நுழைந்த தமிழ்நாடு அணி இப்போது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்த சீசனில் தமிழக அணிக்கு கேப்டனாக விஜய் சங்கர் செயல்பட்டார். வழக்கம்போல இந்த சீசனிலும் தமிழக அணி மிகச்சிறப்பாகவே செயல்பட்டது.
சையத் முஷ்தாக் அலி தொடரில் அணிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்ள வேண்டும். இறுதியில் எந்த அணி முதல் இடத்தில் இருக்கிறதோ அவர்கள் காலிறுதிக்கு தகுதிப்பெறுவார்கள். இரண்டாம் இடத்தில் இருக்கும் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப்பெறும்.
மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, கோவா, பஞ்சாப் ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்த பிரிவில் தமிழக அணி இடம்பிடித்திருந்தது. இந்த 5 அணிகளுக்கு எதிரான போட்டியில் கோவாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே தமிழ்நாடு தோற்றிருந்தது. மீதமுள்ள நான்கு போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் கேரளாவை எதிர்கொண்ட தமிழ்நாடு அந்த போட்டியையும் சிறப்பாக வென்று அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் ஹைதராபாத் அணியை தமிழ்நாடு இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியை ரொம்பவே எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு வென்றிருக்கிறது.
ஹைதராபாத் அணியே முதலில் பேட் செய்திருந்தது. தமிழக அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஹைதரபாத் 18.3 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தமிழக அணியின் சார்பில் 32 வயதாகும் சரவணகுமார் 3.3 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹைதரபாத்தின் டாப் ஆர்டரை மொத்தமாக காலி செய்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். கோயம்புத்தூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சரவணகுமாருக்கு இதுதான் முதல் சீசன். அதிலேயே தமிழக அணியை தனது பெர்ஃபார்மென்ஸ் மூலம் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருச்சி வாரியர்ஸ் அணிக்காக ஆடிய சரவணகுமார் கடந்த சீசனின் அதிக விக்கெட் வீழ்த்திய நபராக இருந்தார்.
இவருக்கு உறுதுணையாக முருகன் அஷ்வின் பயங்கர எக்கனாமிக்கலாக 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி சார்பில் கேப்டன் விஜய் சங்கர் 43 ரன்களையும் சாய் சுதர்சன் 34 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக இருந்து போட்டியை முடித்து வைத்தனர். தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டியில் காலடி எடுத்து வைத்தது.
நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் கர்நாடகா அல்லது விதர்பாவை தமிழ்நாடு எதிர்கொள்ளும்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion