ODI World Cup 2023: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு காவி ஜெர்சியா? பி.சி.சி.ஐ. சொன்ன பதில் இதுதான்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றப்படும் என்ற தகவல் வெறும் வதந்தியே என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய இந்த தொடர் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகக் கோப்பையை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் 10 அணிகளும் விளையாடி வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. தற்போது 6 வது லீக் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும், எட்டாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் விளையாடி வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான்:
முன்னதாக, நேற்று (அக்டோபர் 8 ) ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும், வரும் அக்டோபர் 11ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது.
பின்னர், ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதும் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே, அந்த போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்ஸி அணிந்து விளையாடும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், ரசிகர்கள் பலரும் நீல நிற ஜெர்ஸி நன்றாகத்தானே உள்ளது. பிறகு ஏன் ஆரஞ்சு ஜெர்ஸி என்று கேள்வியும் எழுப்பி வந்தனர்.
பிசிசிஐ மறுப்பு:
இந்நிலையில், பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடும் போட்டியில் நீல நிற ஜெர்ஸியுடன் தான் விளையாடும் என (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் கூறியுள்ளார்.
வதந்தி:
இது தொடர்பாக பேசிய ஆஷிஷ் ஷெலர், ”இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ஜெர்ஸியை மாற்றப்போவதில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயமாக நீல நிற ஜெர்ஸியுடன் தான் விளையாடும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜெர்ஸி ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுப்படுகிறது என்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். அது போன்ற செய்திகள் வெறும் வதந்தி தான்.” என்று தெரிவித்துள்ளார்.
2019 உலகக் கோப்பை:
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஆடையுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ODI World Cup 2023: வில் யங், மிட்செல், லாதம் அபாரம்; நெதர்லாந்து அணிக்கு 323 ரன்கள் இலக்கு!
மேலும் படிக்க: ICC World Cup Point Table 2023: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா! புள்ளி பட்டியலில் எத்தனையாவது இடம்?