SA Vs BAN, Match Highlights; தனி ஒருவனாக போராடிய மஹமுதுல்லா ஆறுதல் சதம்; தென்னாப்பிரிக்கா 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
SA Vs BAN, Match Highlights: தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் சேர்த்தது. டி காக் 174 ரன்களும், க்ளாசன் 90 ரன்களும், மார்க்ரம் 60 ரன்களும் அதிகபட்சமாக குவித்திருந்தனர்.
![SA Vs BAN, Match Highlights; தனி ஒருவனாக போராடிய மஹமுதுல்லா ஆறுதல் சதம்; தென்னாப்பிரிக்கா 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ODI World Cup 2023 South Africa won 149 runs against Bangladesh full match highlights Wankhede Stadium SA Vs BAN, Match Highlights; தனி ஒருவனாக போராடிய மஹமுதுல்லா ஆறுதல் சதம்; தென்னாப்பிரிக்கா 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/108066a82e20012fa89c3d3080550c611698160035244102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
SA Vs BAN, Match Highlights: இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிகெட் 2023 தொடரில் இதுவரை 22 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. 10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகள் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த தொடர் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 24ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதிக்கொண்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் சேர்த்தது. இதில் டி காக் 174 ரன்களும், க்ளாசன் 90 ரன்களும், மார்க்ரம் 60 ரன்களும் அதிகபட்சமாக குவித்திருந்தனர்.
அதன் பின்னர் 300 பந்துகளில் 383 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி தோல்வியைச் சந்திக்கும் என பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் யோசித்திருப்பார்கள். இதனை உறுதி செய்யும் வகையில் வங்கதேச டாப் ஆர்டர் மிகவும் மோசமாக விளையாடினர். தொடக்க வீரர் தன்சித் மற்றும் ஷாண்டோ ஆகியோர் மார்கோ ஜான்சென் ஓவரில் அடுத்தடுத்த பந்தில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 30 ரன்களில் 2 விக்கெட்டினை இழந்து சரிவைச் சந்தித்த வங்கதேசம் அதன் பின்னர் மீளவே இல்லை. தன்சித் மற்றும் ஷாண்டோ விக்கெட் இழந்த பின்னர் வந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் மிகவும் மோசமான ஷாட் ஆடி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இதையடுத்து வந்த முஸ்தஃபிகுர் மற்றும் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் கூட்டணி மீது மொத்த பொறுப்பும் விழுந்தது. ஆனால் இவர்களின் விக்கெட்டினை கனிசமான இடைவெளியில் தென்னாப்பிரிக்கா கைபற்றியது. 15 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டினை இழந்து 58 ரன்கள் சேர்த்து இருந்தது. இந்நிலையில் வங்கதேசத்தின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இதன் பின்னர் வங்கதேச அணி தோல்வி வித்தியாசத்தை குறைக்க போராடியது. தென்னாப்பிரிக்கா வெற்றியை உறுதி செய்து விட்டதால், ரன் ரேட்டினை மேலும் உயர்த்த விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த மிகத் தீவிரமாக செயல்பட்டது. இதற்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. வங்கதேச அணியின் மகமதுல்லா சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி அணியின் தோல்வி வித்தியாசத்தினை குறைத்ததுடன், தென்னாப்பிரிக்கா அணிக்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தினை பார்க்கும்போது இவருக்கு நல்ல பார்ட்னர்ஷிப் யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் கொடுத்து இருந்தால் வங்காள தேசம் வெற்றியை தனதாக்கி இருக்குமே என யோசிக்கும் அளவிற்கு விளையாடினார். சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடிய இவர் 111 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்து, தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 11 பவுண்டரி 4 சிக்ஸர் பறக்கவிட்டார். இறுதியில் வங்கதேச அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் சேர்த்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)