IND vs BAN: பெரிய அணிகளுக்கு ஆப்கன், நெதர்லாந்து கற்றுத்தந்த பாடம்! எச்சரிக்கையுடன் களமிறங்குமா இந்தியா?
நாளை ஆப்கான், நெதர்லாந்து வரிசையில் வங்கதேசம் இணையுமா? அல்லது புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இந்தியா தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெறும் 10 அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ளதால் போட்டி பலமிகுந்த அணிகளாக கருதப்படும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளே கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டது.
ஆப்கான், நெதர்லாந்து வெற்றி:
தொடரில் பங்கேற்ற குட்டி அணிகள் என்று கிரிக்கெட் விமர்சகர்களாலும், நிபுணர்களாலும் கருதப்படும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் அவர்களுக்குள் பெரியளவில் மோதிக்கொள்வார்கள் என்றே கருதப்பட்டது. இதில், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளால் பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்த தொடர் முன்னெப்போதும் இல்லாத வகையில் களத்தில் திறமையை காட்டுபவனுக்கே வெற்றி என்ற அடிப்படை சித்தாந்தத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாப்பிரிக்க அணிக்கு நெதர்லாந்து அணியும் தந்த அதிர்ச்சியே இந்த தொடரில் களத்தில் திறமையை காட்டுபவனுக்கே வெற்றி என்பதை காட்டுகிறது. ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் வெற்றியானது மற்ற அணிகளுக்கு ஒரு அபாய எச்சரிக்கை என்றும் சொல்லலாம்.
அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி:
ஏனெ்னறால், பெரிய அணிகள் என்று மார்தட்டி கொள்ளும் அணிகள் சிறிய அணிகளுடன் விளையாடும்போது மிகவும் அலட்சியமாக ஆடி வருகின்றன. அந்த அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் பலமிகுந்த அணிகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு பாடம் எடுத்தன.
மற்ற கிரிக்கெட் அணிகளை காட்டிலும் ஆப்கானிஸ்தான் அணி குறைந்த காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு கிரிக்கெட் அணியாக உள்ளது. நிச்சயமாக இன்னும் சில ஆண்டுகளில் பலமிகுந்த அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தானும் இருக்கும். ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளும் பெரிய அணிகளுடன் ஆடும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தங்களை திரும்பி பார்க்க வைக்கின்றனர்.
இந்தியாவுக்கு எச்சரிக்கை:
இந்த உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தானும், யாரும் எதிர்பார்க்காத நெதர்லாந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த இரு அணிகளை காட்டிலும் வலுவான அணியாக கருதப்படும் வங்கதேச அணி நாளை இந்தியாவுடன் மோதுகிறது. புனேவில் நடைபெற உள்ள இந்த போட்டியில் களத்தில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கே வெற்றி என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டியது அவசியம் ஆகும். ஏனென்றால், ஆசியக் கோப்பை கடைசி லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியிருந்தது. இதனால், நாளை வங்கதேச அணி உத்வேகத்துடனும், 2007ல் நடந்ததை திருப்பி நடத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும் களமிறங்கும்.
ஆனால், இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியில் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் இந்திய அணி சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும். நாளை ஆப்கான், நெதர்லாந்து வரிசையில் வங்கதேசம் இணையுமா? அல்லது புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இந்தியா தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க: LEO Release LIVE: லியோ படம் ரிலீஸ் .. இணையத்தில் ட்ரெண்டாகும் லோகேஷின் முந்தைய படங்கள்..!
மேலும் படிக்க: World Cup 2023: பந்துவீச்சு பயிற்சியில் ரோஹித் சர்மா.. டிப்ஸ் தரும் ரவிசந்திரன் அஸ்வின்.. வைரலாகும் வீடியோ!