PAK vs AUS: பெங்களூருவில் ஆதிக்கம் செலுத்துமா ஆஸ்திரேலியா? பந்தாடுமா பாகிஸ்தான்..? இன்றைய உலகக்கோப்பை போட்டி!
புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏழு உலகக் கோப்பை பதிப்புகளிலும் ஆஸ்திரேலியா ஒவ்வொரு முறையும் நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.
உலகக் கோப்பை 2023 ல் இன்றைய 18வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகள் மோதும் போட்டி எம்.சின்னசாமி மைதானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
உலகக் கோப்பை 2023ல் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது. அதேபோல், இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் தற்போது அடுத்த போட்டிக்காக பெங்களூரு வந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் போட்டி விவரங்கள்:
போட்டி- ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், 18வது போட்டி, உலகக் கோப்பை 2023
இடம் - எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு, கர்நாடகா
ஆஸ்திரேலியா எப்படி..?
இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா, இலங்கையை பெரிய ஸ்கோரை அடிக்கவிடாமல் தடுத்தது. ஆடம் ஜாம்பா உள்பட அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்த, பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஸ் இங்கிலிஸ் ஆகியோர் உலகக் கோப்பையில் முதல் அரைசதங்களை பதிவு செய்தனர். ஆடம் ஜம்பாவுக்கு 150 ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்களை எடுக்க 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏழு பதிப்புகளிலும் ஆஸ்திரேலியா ஒவ்வொரு முறையும் நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் எப்படி..?
உலகக் கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியுடன் வலுவான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக பாபர் அசாம் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த 19 ஒருநாள் போட்டிகளில், ஷஹீன் அப்ரிடி ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பெங்களூர் பிட்ச் யாருக்கு சாதகமானது..?
பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியம் ஆடுகளம் பேட்டிங்கு செய்யும் வீரர்களுக்கு சொர்க்கம் என்றே கூறலாம். எனவே, இன்றைய போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஸ்கோரை இங்கு எதிர்பார்க்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இரு அணிகளுக்கும் இடையே 107 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆஸ்திரேலியா 69 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்தது. 1 போட்டி டிரா ஆனது. ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
மழைக்கு வாய்ப்பு இருக்கா..?
பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை மதியம் 29-30 டிகிரி செல்சியஸாகவும், மாலையில் 24-27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். எனவே, மழை பெய்ய வாய்ப்பில்லை.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்) , சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப்.