PAK Vs NZ: ஃபின் ஆலன் அதிரடி சதம்! நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்த பாகிஸ்தான்!
டுனெடினில் நடந்த டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.
டுனெடினில் நடந்த டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி பெற்ற மூன்றாவது தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் தொடரையும் இழந்தது பாகிஸ்தான் அணி.
ஃபின் ஆலன் அதிரடி சதம்:
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் இழந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலன் அதிரடியாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவர் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன்137 ரன்கள் குவித்து இன்னிங்ஸ் ஆடினார்.
பாகிஸ்தானின் பந்துவீச்சை பொறுத்தவரை ஹரிஸ் ரவுஃப் 4 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனை தொடர்ந்து, முகமது நவாஸ் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை தூக்கி 44 ரன்களையும், கேப்டன் ஷஹீன் அப்ரிடி 4 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட் எடுத்தார். மேலும், ஜமான் கான் 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்.
இலக்கை துரத்த தவறிய பாகிஸ்தான்:
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி பெற்ற மூன்றாவது தோல்வி இதுவாகும். தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, உசாமா மிர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்குப் பதிலாக பாகிஸ்தான் அணி வாசிம் ஜூனியர், ஜமான் கான், முகமது நவாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு அளித்தது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ப்ளேயிங் 11 அணி விவரம்:
நியூசிலாந்து அணி:
ஃபின் ஆலன், டெவோன் கான்வே, டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), இஷ் சோதி, டிம் சவுத்தி, மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்
பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசம், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஆசம் கான் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி (கேப்டன்), முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப், ஜமான் கான்