Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Gambhir Agarkar Gill BCCI: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை கவுதம் கம்பீர், அஜித் அகர்கர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சேர்ந்து சிதைத்து வருவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Gambhir Agarkar Gill BCCI: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் மோசமான நிர்வாகத்தால், திறமையான பல இளம் வீரர்களின் வாய்ப்புகள் பறிபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
அணியின் செயல்பாடு சீராக இருக்க, கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது மிகவும் அவசியம். அதற்கு தோனி - கேரி க்றிஸ்டன், கோலி - ரவிசாஸ்திரி மற்றும் ரோகித் - ராகுல் ட்ராவிட் கூட்டணியை உதாரணமாக கூறலாம். அதேநேரம், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே சுமூகமான உறவு இல்லாவிட்டால், என்ன நடக்கும் என்பதை க்ரேக் சாப்பல் - கங்குலி மற்றும் கும்ப்ளே - கோலி காலகட்டங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. மேற்குறிப்பிட்ட சூழல்களில் எல்லாம் ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் நட்சத்திர வீரர் அணியின் கேப்டனாக இருந்தார். அதனால், பயிற்சியாளரால் அணியின் மீது நேரடியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு முயற்சித்தவர்களும் தோல்வியையே தழுவினர். அதற்கு நேர் எதிரான ஒரு சூழல் தான் தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் வேதனை:
ரோகித்திடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து, அணியின் நிர்வாகம் ஒட்டுமொத்தமாக கம்பீரின் கைவசம் சென்றதாகவே கருதப்படுகிறது. கில்லை பெயரளவில் கேப்டனாக நியமித்து விட்டு, அனைத்து அதிகாரங்களையும், தேர்வுக்குழு தலைவர் அகர்கருடன் சேர்ந்து பயிற்சியாளரே அனுபவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீரர்களின் தேர்வு, அவர்களுக்கான வாய்ப்பு, ப்ளேயிங் லெவன் கட்டமைப்பு என , இந்திய கிரிக்கெட் அணியின் பல முடிவுகள் ரசிகர்களுக்கு குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் திறமையான பல இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டு, அவர்களது எதிர்காலத்தில் கம்பீர், அகர்கர் மற்றும் கில் ஆகியோர் மண்ணள்ளிப்போடுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மண்ணள்ளிப்போடும் கம்பீர் & கோ
கம்பீர் & கோ-வால் பாதிக்கப்பட்டதாக, பல இளம் மற்றும் முன்னணி நட்சத்திர வீரர்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பட்டியலிட்டு வருகின்றனர்.
- இந்திய அணியின் ஜாம்பவானான சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பிரிவு உபச்சாரம் கூட இன்றி, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவித்தார்
- பார்டர் கவாஸ்கர் தொடருக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவோம் என ரோகித் மற்றும் கோலி கூறியிருந்தாலும், இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக திடீரென ஓய்வினை அறிவித்தனர்
- ஒருநாள் போட்டிகளில் 5வது இடத்தில் சிறப்பாக விளையாடி வந்த கே.எல். ராகுலுக்கு, தற்போது அணியில் என்ன இடம் என்பதே தெரியவில்லை?
- டி20 போட்டிகளில் தொடக்க வீரராக அசத்தி வந்த சஞ்சு சாம்சனை, கட்டாயப்படுத்தி ஃபினிஷராக மாற்றி, பெஞ்சிலேயே அமரவைத்துவிட்டனர்
- டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் அசத்தும் ஜெய்ஸ்வால் தண்ணீர் பாட்டிலை தூக்கிக் கொண்டிருக்கிறார் - கேப்டானகவும் வாய்ப்பு இருந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை
- உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும், குல்தீப் யாதவிற்கு ஏதோ ஒரு போட்டியில் தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது
- சிறந்து சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தாலுமே, வாஷிங்டன் சுந்தருக்கு ஏதோ ஒரு போடிட்யில் பேட்டிங் மட்டும் கொடுத்து பந்துவீச்சு வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது
- மூன்று விதமான போட்டிகளிலும் அசத்துவதோடு, கேப்டனாக ஜொலிக்கவும் திறன் இருந்தாலும், ஸ்ரேயஸ் அய்யருக்கு அணியில் இடமில்லை
- டி20 போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், 3 ஃபார்மெட்களுக்கான வீரரான ஹர்ஷித் ராணாவிற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறார்
- அபிமன்யு ஈஸ்வரன் என்பவரை பல தொடருக்காக அணியில் தேர்வு செய்தாலும், ஒரு போட்டிய்ல் கூட ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை
- இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளரான முகமது ஷமியை, உடற்தகுதி இல்லை என கூறி அணிக்கு தேர்வு செய்வதே இல்லை
- ருதுராஜ் கெய்க்வாட் என்பவர் இருந்த இடமே தெரியவில்லை
- டெஸ்ட் & ஒருநாள் போட்டிகளில் கேப்டன், டி20-யில் துணை கேப்டனாக இருந்தாலும், மூன்று வடிவிலான ஆட்டத்திலும் கில்லை காட்டிலும் ஜெய்ஸ்வால் சிறந்த புள்ளி விவரங்களை கொண்டுள்ளார். ஆனாலும், அவருக்கான வாய்ப்புகள் என்பது மறுக்கப்பட்டு வருகிறது.
- ஷிவம் துபே பேட்டிங் ஆல்-ரவுண்டர் கிடையாது என்பதால் அவரை காட்டிலும், மேலே ஹர்ஷித் ராணா களமிறங்கி பேட்டிங் ஆடுவார் என ரசிகர்கள் பட்டியலிட்டு கம்பீர் & கோவை பாராட்டி வருகின்றனர்
அணியை சிதைக்கும் கில்லுக்கான வாய்ப்பு:
இந்திய ஆடவர் அணியின் கேப்டனான கில் பேட்டிங்கிகு சாதகமான ஃப்ளாட் ட்ராக்கில் மட்டுமே விளையாடுவார், அதிலும் டி20 போட்டிகளுக்கு அவர் சரியான தேர்வாக இருக்கமாட்டார் என்பதே ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது. கில்லின் பேட்டிங் புள்ளி விவரங்களும் அதையே உணர்த்துகின்றன. அதனால் தான் அவற்றின் அடிப்படையில் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த கம்பீர், கில்லை டி20 போட்டிக்கும் துணை கேப்டனாக்கி ப்ளேயிங் லெவனில் வாய்ப்பை வழங்கியுள்ளதாக சாடுகின்றனர். இதன் மூலம் 3 ஃபார்மெட்களுக்கும் அவரை பெயரளவில் கேப்டனாக்கி, ஒட்டுமொத்தமாக அணியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர கம்பீர் தீவிரம் காட்டுகிறாராம். அதேநேரம், கில்லின் இருப்பால் அணியின் ப்ளேயிங் லெவன் என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.
கதறும் நட்சத்திரங்கள்:
| வீரர்கள் | T20 இன்னிங்ஸ் | ரன்கள் | சராசரி | ஸ்ட்ரைக் ரேட் | 50/100 |
| அபிஷேக் சர்மா | 23 | 912 | 39.65 | 196.55 | 6/2 |
| சஞ்சு சாம்சன் | 13 | 417 | 34.75 | 182.89 | 0/3 |
| ஜெய்ஸ்வால் | 22 | 723 | 36.15 | 164.31 | 5/1 |
| ருதுராஜ் | 9 | 365 | 60.83 | 147.17 | 2/1 |
| சுப்மன் கில் | 30 | 747 | 28.73 | 141.20 | 3/1 |
மேற்குறிப்பிட்ட வீரர்களில் மற்ற அனைவரையும் காட்டிலும், மிகக் குறைந்த சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டிருப்பது கில் தான். ஆனாலு,ம், டி20 போட்டிகளில் அவருக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டே உள்ளன.
சொதப்பும் கில்:
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஒரு அரைசதத்தை கூட கில்லால் பதிவு செய்யமுடியவில்லை. தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அதைதொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் முறையே, 5 மற்றும் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். இப்படி டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், துணை கேப்டன் என்ற பெயரில் கில்லுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வந்தபடியே உள்ளன. இதனால், திறமை மிக்க மற்றும் அதனை நிரூபித்த ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் தற்போது மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் எட்டியுள்ள மிக மோசமான சூழல், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு வரக்கூடும் என்பதே ரசிகர்களின் அச்சமாக உள்ளது.




















