Ned vs SL Innings Highlights: இறுதியில் வெளுத்து வாங்கிய நெதர்லாந்து - இலங்கைக்கு 263 ரன்கள் இலக்கு
Ned vs SL Innings Highlights: லக்னோவில் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், இலங்கை அணிக்கு நெதர்லாந்து அணி 263 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது.
Ned vs SL Innings Highlights: உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 262 ரன்களை குவித்தது.
இலங்கை நெதர்லாந்து மோதல்:
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் போட்டயில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நெதர்லாந்து அணி விளையாடிய கடைசி லீக் போட்டியில் வலுவான தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்திய உத்வேகத்தில் இன்றைய போட்டியில் களமிறங்கியது. மறுமுனையில் இதுவரை விளையாடிய முதல் 3 லீக் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியுற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் நெதர்லாந்து அணி எட்டாவது இடத்தில் இருக்க, இலங்கை அணி கடைசி இடத்தில் உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் போட்டியை நேரலையில் கண்டு ரசிகக்கலாம்.
தடுமாறிய நெதர்லாந்து:
இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தானர். தொடக்க வீரரான விக்ரம்ஜித் 4 ரன்கள், மேக்ஸ் 16 ரன்கள், காலின் ஆக்கர்மான் 29 ரன்கள், லீடே 6 ரன்கள், நிடாமனுரு 9 ரன்கள் மற்றும் ஸ்காட் எட்வார்ட்ஸ் 16 ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 91 ரன்களை சேர்ப்பதற்குள் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நெதர்லாந்தை மீட்ட கூட்டணி:
இதையடுத்து 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சைப்ரான் மற்றும் லோகன் ஆகியோர் பொறுப்புடன் விளயாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சீரான இடைவெளியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளையும் விளாசினர். இதனால் அடுத்தடுத்து இருவரும் அரைசதம் விளாசினர். தொடர்ந்து 82 பந்துகளில்4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 70 ரன்களை குவித்து இருந்தபோது, சைபிராண்ட் ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 7வது விக்கெட்டிற்கு 130 ரன்களை குவித்தது. இருப்பினும் மறுமுனையில் லோகன் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அவரும் 75 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 59 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணிக்கான இலக்கு:
தொடர்ந்து வந்த வாண்டர் மெர்வ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் எக்ஸ்ட்ராக்களாகவும் இலங்கை பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதனால், 49.4 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மதுஷங்கா மற்றும் கசுன் ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். தொடர்ந்து நெதர்லாந்து அணி நிர்ணயித்த இலக்கை இலங்கை அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.