MS Dhoni On This Day In 2013: சிங்கம் சிங்கிளாதான் வரும்.. கடைசி ஓவரில் தேவைப்பட்ட 15 ரன்கள் .. இந்திய அணியை கரைசேர்த்த தோனி.. வைரல் வீடியோ!
2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, இதே சாதனையை 2013ல் இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (ஜூலை 11) தோனி செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு பிறகு விராட் கோலி, ராகுல் டிராவிட்டுக்கு பிறகு புஜாரா என்று அடுத்த தலைமுறை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்களுக்கு அடுத்த இடத்தில் வருவதற்கான எதிர்கால இந்திய தலைமுறைகளை பிசிசிஐ தயாரித்து வருகிறது.
யாரை போன்று யார் கிடைத்தாலும் எம்.எஸ். தோனி இடத்தை நிரப்ப இந்திய அணி இன்னும் திணறிகொண்டுதான் இருக்கிறது. இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குதல், இக்கட்டான சூழ்நிலையில் சிறிய மாற்றம் செய்தல், விக்கெட் வீழ்ந்தாலும் கடைசிவரை இமயமலை நிற்பது போன்ற இவரது திறமையை சொல்லிகொண்டே போகலாம்.
இந்திய அணி தோல்வியை நோக்கி சொல்லும்போது, வெற்றியை தனது பேட்டினால் கட்டி கொண்டு இழுப்பதில் உலகின் சிறந்த வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். டோனி தனது சர்வதேச வாழ்க்கையில், டீம் இந்தியாவுக்காக பல போட்டிகளில் ஃபினிஷராக இருந்து வெற்றியை தேடி தந்துள்ளார்.
2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, இதே சாதனையை 2013ல் இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (ஜூலை 11) தோனி செய்தார்.
வெற்றிக்காக ரன்களை விரட்டிய இந்திய அணி 9 விக்கெட்கள் இழந்து தடுமாறியது. அப்போது 6வது இடத்தில் களமிறங்கிய எம்.எஸ். தோனி கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தந்தார்.
கடந்த 2013 ஜூலை 11ம் தேதி ட்ரை சிரீஸ் இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணி மோதியது முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன்களுக்குள் சுருண்டது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குமார் சங்கக்கார 71 ரன்களும், லகிரு திரிமனே 46 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 27 ரன்களுக்குள் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி விக்கெட்டை இழந்தது. மறுமுனையில் தொடக்க வீரர் ரோகித் சர்மா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 58 ரன்களில் வெளியேறினார்.
பின்வரிசை வீரர்களான தினேஷ் கார்த்திக் 23 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 32 ரன்களுடனும் வெளியேற, இந்திய அணி 145 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய இந்திய அணி போராட்ட, எதிர் முனையில் தோனி மட்டுமே எந்தவொரு பதட்டமின்றி கெத்தாக நின்றார். 9 விக்கெட்களை இழந்த இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவையாக் இருந்தது. அப்போது கேப்டன் எம்எஸ் தோனி கிரீஸில் இருக்க, இஷாந்த் சர்மா நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்தார்.
இலங்கை அணி சார்பில் கடைசி ஓவரை ஷமிந்த எரங்கா வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை தோனி விட, இந்திய ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பதட்டம் தொற்றி கொண்டது. இந்திய அணிக்கு 5 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார்.
2013, India - Sri Lanka - West Indies, Tri Series.
— Captain Cool (@CaptainCool_07) November 14, 2021
India VS Sri Lanka : Final
India needed 15 of 6 balls with only 1 wicket remaining, with MS Dhoni on Strike.
49.1 Dot
49.2 Six
49.3 Four
49.4 Six
We Won!💛#MSDhoni pic.twitter.com/mcoB40I969
பின்னர் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரியை தோனி விரட்ட, இந்திய அணிக்கு 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் அடுத்த அதாவது நான்காவது பந்தில் அபாரமான சிக்ஸர் அடித்து தோனி போட்டியை முடித்து வைத்தார். இதன்மூலம் இறுதிப் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 6-வது இடத்தில் களமிறங்கிய தோனி 52 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்தார். இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இறுதிப் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது.