Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் குல்தீப் யாதவ். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவர் 4 விக்கெட்களை எடுத்தார்.

குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் சுருட்டினர். குல்தீப் தனது சுழலில் சிக்க வைத்து நான்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் குல்தீப் தற்போது இணைந்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், குல்தீப் யாதவ், டேவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சன், கார்பின் போஷ் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரை வீழ்த்தினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் போன்ற ஜாம்பவான்களை குல்தீப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் யார்.?
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் முகமது ஷமி ஆவார். ஒருநாள் போட்டிகளில் ஷமி 16 முறை 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் 12 முறை இச்சாதனையை செய்துள்ளார். 11 முறை 4 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார்.
- முகமது ஷமி - 16
- அஜித் அகர்கர் - 12
- குல்தீப் யாதவ் - 11
- அனில் கும்ப்ளே - 10
- ஜவகல் ஸ்ரீநாத் - 10
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான குல்தீப்பின் புள்ளிவிவரங்கள்
குல்தீப் யாதவ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான சாதனையை வைத்துள்ளார். இதுவரை அவர் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த அணிக்கு எதிராக குல்தீப்பின் எகானமி விகிதம் 5-க்கும் குறைவாக உள்ளது. குல்தீப் தனது சர்வதேச வாழ்க்கையில் 350-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் 200 ஒருநாள் விக்கெட்டுகளை நெருங்கி வருகிறார். தற்போதைய ஒருநாள் தொடரைப் பொறுத்தவரை, குல்தீப் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக உள்ளார். அவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




















