Virat Sick: அகமதபாத் டெஸ்ட் போட்டியில் விராட்கோலிக்கு காய்ச்சல் இருந்ததா? ரோகித்சர்மா விளக்கம்..!
அகமதாபாத் டெஸ்ட் போட்டியின்போது விராட்கோலி காய்ச்சலுடன் களமிறங்கினாரா? என்பதற்கு ரோகித்சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் ஆடிய பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டியில் விராட்கோலி சதமடித்து டெஸ்ட் போட்டியிலும் மூன்று ஆண்டுகளாக சதமடிக்கவில்லை என்ற ஏக்கத்தை தீர்த்தார். இந்த நிலையில், விராட்கோலி உடல்நலக்குறைவுடன் அதாவது காய்ச்சலுடன் 4ம் நாள் பேட்டிங் செய்து களமிறங்கினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட்கோலியின் உடல்நலக்குறைவு குறித்து பதிவிட்டது பெரும் வைரலானது.
அவரது பதிவிற்கு கீழே, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் காய்ச்சலுடன் பேட்டிங் செய்யும்போதும் கோலியால் சாதிக்க முடியும் என்று பதிவிட்டிருந்தார். இவர்களது போஸ்ட்களும், கமெண்ட்களும் வைரலானதைத் தொடர்ந்து விராட்கோலியை பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கேப்டன் ரோகித்சர்மாவிடம் நிருபர்கள் கேட்டபோது, “ நீங்கள் சமூக வலைதளங்களில் பார்ப்பதை எல்லாம் நம்பவேண்டாம். விராட்கோலிக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைக்க வேண்டாம். அவருக்கு இருமல் மட்டுமே இருந்தது” என்றார்.
அவருடன் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்ஷர்படேல், “ விக்கெட்டுகளுக்கு இடையில் அவர் ஓடிய விதத்தை பார்க்கும்போது, அவர் உடல்நலக்குறைவுடன் இருந்தது போல தெரியவில்லை. அவருடன் பேட்டிங் செய்தது வேடிக்கையாக இருந்தது. கடும் வெப்பத்திலும் நன்றாக ஓடினார்” இவ்வாறு அக்ஷர் படேல் கூறினார். விராட்கோலி – அக்ஷர்படேல் கூட்டணி இணைந்து சர்வதேச 6வது விக்கெட்டிற்கு 162 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட்கோலி இன்றுடன் நிறைவடைந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் தேநீர் இடைவேளையின்போது களத்திற்குள் வந்து 4ம் நாள் போட்டி முடிவடைவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை களத்தில் இருந்தார். மொத்தம் 364 பந்துகள் பேட் செய்த விராட்கோலி மொத்தம் 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் எடுத்தார்.
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கவாஜாவின் 180 ரன்கள், கேமரூன் கிரீனின் 114 ரன்களுடன் ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 480 ரன்களை குவிக்க, இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் சுப்மன்கில்லின் அபாரமான 128 ரன்கள், விராட்கோலியின் 186 ரன்கள், அக்ஷர் படேலின் 79 ரன்கள், பரத்தின் 44 ரன்களுடன் 571 ரன்களை முதல் இன்னிங்சில் குவித்தது. ஆட்டம் டிராவை நோக்கி சென்ற போது, கடைசி நாள் ஆட்டத்தில் ட்ராவிஸ் ஹெட் 90 ரன்களுடனும், லபுசேனே 63 ரன்களுடனும் எடுக்க ஆஸ்திரேலிய 175 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனால், போட்டி டிராவில் முடிந்தது.
மேலும் படிக்க:Ashwin on Pujara: நான் வேண்டுமானால் கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா? அஸ்வினின் இந்த ட்வீட்க்கு என்ன காரணம்?
மேலும் படிக்க: IND vs AUS, 4th Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி: தொடரை வென்றது இந்தியா..!