IND vs AUS, 4th Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி: தொடரை வென்றது இந்தியா..!
IND vs AUS, 4th Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் 10ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் சேர்த்தது.
அந்த இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் சதம் விளாசினர். கிரீன்க்கு இதுதான் முதல் டெஸ்ட் சதம் ஆகும். அதேபோல் இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக விக்கெட்டுகள் (113) வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்து இருந்தார்.
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவும் அதிரடி காட்டியது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி சதம் விளாச, இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 571 ரன்கள் குவித்து அஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் அதிகம் எடுத்து இருந்தது.
அதன் பின்னர் தனது இரண்டவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்த நிலையில், இரு அணி கேப்டன்களும் போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள ஒத்துக் கொண்டதால், நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதன் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.