(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs PAK: ஆசியகோப்பையில் மீண்டும் மோதும் இந்தியா-பாக்.. ஜடேஜாவிற்கு பதிலாக இவரா?
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏ பிரிவில் நடைபெற்ற இரண்டு குரூப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. இதன்காரணமாக ஏ பிரிவில் முதலிடம் பிடித்து இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
ஏற்கெனவே ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்து இருந்தது. இந்தச் சூழலில் இரண்டாவது முறையாக இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ள ஜடேஜாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது அக்சர் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Getting into the #AsiaCup2022 Super Four groove 👌 👌#TeamIndia pic.twitter.com/VMcyG9ywQ5
— BCCI (@BCCI) September 2, 2022
இவை தவிர வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் கடந்த இரண்டு குரூப் போட்டிகளிலும் மோசமாக பந்துவீசினார். ஆகவே அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவை தோற்கடிக்க துடிப்புடன் உள்ளது. அந்த அணியின் வீரர்கள் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் நோக்கத்தில் உள்ளனர்.
முன்னதாக ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஏற்கெனவே காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா விலகியிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஜடேஜா 35 ரன்கள் அடித்து அசத்தினார். இந்தச் சூழலில் அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
சூப்பர் 4 சுற்று அட்டவணை:
செப்டம்பர் 3: ஆஃப்கானிஸ்தான்-இலங்கை
செப்டம்பர் 4: இந்தியா-பாகிஸ்தான்
செப்டம்பர் 6: இந்தியா-ஆஃப்கானிஸ்தான்
செப்டம்பர் 7: பாகிஸ்தான்-இலங்கை
செப்டம்பர் 8: இந்தியா-இலங்கை
செப்டம்பர் 9: ஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான்
செப்டம்பர் 11: இறுதிப் போட்டி சூப்பர் 4 முதலிடம்- இரண்டாம் இடம் பிடித்த அணிகள்
அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோதும். ஆசிய கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி இம்முறையும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் படிக்க: நாயகன் மீண்டும் வர.. எட்டுத்திக்கும் பயம்தானே; சிஎஸ்கேவுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி