Shubman Gill: காயங்கள் ஆரம்பம், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் - இந்திய வீரர் சுப்மன் கில் விலகல், மாற்று வீரர் யார்?
Shubman Gill: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து, இந்திய வீரர் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Shubman Gill: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து, சுப்மன் கில் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
சுப்மன் கில் விலகல்:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கா, இந்தியா அங்கு சென்றுள்ளது. இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் (WACA) மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியாவின் பயிற்சி ஆட்டத்தின் போது, கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க போட்டியில் சுப்மான் கில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக தேவ்தத் படிக்கலை ஆஸ்திரேலியாவில் தங்கவைக்க இந்திய கிரிக்கெட் சம்மேளனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கில்லுக்கு எலும்பு முறிவு?
சுப்மன் கில்லுக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன்கள் எலும்பு முறிவை உறுதிசெய்தது. இதனால் அவர் இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் நடைபெற உள்ள, ஃப்ளட்லைட் டெஸ்டில் இருந்து மட்டுமே கில் மீண்டும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை பயிற்சியின் போது கே.எல்.ராகுல் இடது முழங்கையில் காயம் கண்ட பிறகு, கில்லின் காயம் இந்தியாவுக்கு ஏற்பட்ட இரண்டாவது பின்னடைவாகும். இதையடுத்து, தேசிய தேர்வுக் குழுவுடன் ஆலோசித்த அணி நிர்வாகம், கடந்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா ஏ அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் படிக்கலை, பேக்-அப் பேட்டராக தக்கவைக்குமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
ரோகித் சர்மா இல்லாத இந்திய அணி:
இந்திய ஏ அணியில் உள்ள மற்ற வீரர்கள் நாளை இந்தியா திரும்பும் அதே வேளையில், படிக்கல் மட்டும் தேசிய அணியுடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுலின் முழங்கை காயம் சிறியது என்றும், பெர்த் டெஸ்டில் அவர் பங்கேற்பது இன்னும் ஓரிரு நாட்களில் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஆண் குழந்தையைப் பெற்ற பிறகு அடுத்த வார தொடக்கத்தில் அணியில் சேர இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா - முதல் டெஸ்டில் இடம்பெறுவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த இரண்டு முறையும் இந்திய அணி, பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்ற நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரின்போது கூட, இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் காயம் காரணமாக அடுத்தடுத்து தொடரிலிருந்து வெளியேறினர். இருப்பினும் அனுபவில்லாத இளம் வீரர்களை கொண்டு, பிரிஸ்பேன் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டிய இந்திய அணி, தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.