Womens T20 Worldcup: மாஸ் ஆக அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி.. நெதர்லாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
மகளிர் உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மகளிர் உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி வெற்றி:
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லந்து அணி, 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து இருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், டக்வர்த் லூயிஸ் முறைப்படி, 8.2 ஓவரில் அயர்லாந்து அணி இந்தியாவை காட்டிலும் 5 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதையடுத்து இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் பி பிரிவிலிருந்து இரண்டாவது அணியாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி பேட்டிங்:
செயிண்ட் ஜாட்ஜ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி 62 ரன்களை சேர்த்தபோது, 24 ரன்கள் எடுத்து இருந்த ஷஃபாலி வர்ம தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆட, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் அவருக்கு உறுதுணையாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்மிருதி மந்தனா அரைசதம்:
அயர்லாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ஸ்மிருதி மந்தனா, 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். சர்வதேச டி-20 போட்டிகளில் அவர் அடிக்கும் 22வது அரைசதம் இதுவாகும். மறுமுனையில் ஹர்மன் பிரீத் கவுர் 13 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனாலும், ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 87 ரன்களை குவித்து அவுட்டானார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லந்து அணி, மழை குறுக்கிட்ட நிலையில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி:
8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கியது. 26 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இதன்மூலம் 2 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி பி பிரிவிலிருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.