IND vs SA T20 WC Final: ‘தட்டுறோம்... தூக்குறோம் கோப்பை நமக்குதான்’: இறுதிப் போட்டியை காண ஆவலுடன் மணித்துளிகளை எண்ணும் ரசிகர்கள்
IND vs SA Final T20 World Cup 2024: இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெற்றி பெற்று நிச்சயம் தாயகம் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தஞ்சாவூர்: இன்னைக்கு நடக்கும் டி20 உலகக் கோப்பையில் மகுடம் நமக்குதான். கோப்பையை தட்டுறோம். தூக்குறோம் என்று வெகு உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இறுதிப் போட்டியில் நுழைந்த இந்தியா
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் நிறைவடைந்து அரையிறுதி போட்டிகள் நடந்தன. அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
வெற்றி மகுடத்தை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம்
இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி நம் இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022ல் இழந்த டி20 உலகக் கோப்பையை இந்த முறை நம் இந்திய அணி பெறும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களுக்கு உள்ளது. கோப்பையை நாம் வெல்ல வேண்டும் என்பதற்காக இன்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் முக்கியமாக கிராமப்புறத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை கிரிக்கெட் ரசிகர்கள் நடத்தினர். இந்த போட்டி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் தரப்பில் கூறியதாவது:
தட்டுறோம்... தூக்குறோம் கோப்பை நமக்குதான்
கல்லூரி மாணவர் பூதலூர் விஜய்: பரபரப்பும், எதிர்பார்ப்போடும் இருக்கோம். இந்த போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி வெற்றிக் கோப்பையை பெறும். அந்த மகுடம் நமக்குதான். சின்ன புள்ளைங்க முதல் பெரியவர்கள் வரை இந்த போட்டியை காண ரொம்பவே ஆவலோட இருக்கோம். இந்த முறை கோப்பை நமக்குதான். தட்டுறோம், தூக்குறோம். நம் இந்திய அணி வீரர்கள் அடிக்கும் அடி ஒவ்வொன்றும் இடிபோல இறங்கும். பந்துகள் சிக்ஸர், பவுண்ட்ரியாக பறக்கும். உற்சாகத்தோடு இருக்கோம். கேப்டன் ரோகித் சர்மா இந்த முறை கோப்பையை நிச்சயம் கொண்டு வர்றார்.
எதிர்பார்ப்போட காத்திருக்கும் ரசிகர்கள்
8.கரம்பை விஜயகுமார்: வேலைகளை கூட செய்யாமல் இந்த போட்டிக்காக அத்தனை பேரும் காத்துக்கிட்டு இருக்கோம். நிச்சயம் இந்த முறை கோப்பை நமக்குதான். இங்கிலாந்து அணியிடம் வெற்றிக் பெற்றோம். அதுபோல இந்த இறுதிப்போட்டியிலும் இந்தியா ஜெயிக்கணும் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
திருவாரூரில் இருந்து வந்து தஞ்சையில் வேலை பார்க்கும் தமிழ்வாணன்: வேலையே பார்க்க முடியலைங்க. எப்ப போட்டி தொடங்கும். எப்போ நம் அணி கையில கோப்பை வரும் என்ற எதிர்பார்ப்போட இருக்கோம். இதுக்காகவே வேக வேகமாக வேலையை பார்த்துக்கிட்டு இருக்கோம். நிச்சயம் இந்த முறை கோப்பை இந்திய அணிக்குதான்.
கபாடி வீரர் மாதவன்: உறுதியாக சொல்வோம் அந்த கோப்பை நமக்குதான். வெற்றியோடு நம்ம அணி வீரர்கள் ஊருக்கு திரும்புவாங்க. போன முறை விட்டதை இந்த முறை பிடித்து விடுவார்கள். ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கோம். வீ லக் கிரிக்கெட். நான் கபாடி வீரர். இருந்தாலும் கிரிக்கெட் மீதும் விருப்பம். நம்ம அணி ஆடற போட்டிகளை தவறாம பார்த்துவிடுவேன்.
தஞ்சை கரந்தையை சேர்ந்த பாலு: நிச்சயம் நமக்குதான் கோப்பை. நம்ம அணி ஜெயிக்கணும் என்று மீனாட்சி சுந்தரேஸ்வரை என் மகளுடன் வந்து வேண்டிக்கிட்டேன். பல கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பு இன்று நிச்சயம் நிறைவேறும். நம்பிக்கையுடன் இருக்கோம்.
இப்படி இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெற்றி பெற்று நிச்சயம் தாயகம் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.