
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
ND vs SA Final Match Highlights:டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

டி20 உலகக் கோப்பை:
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் இந்த எதிர்பார்ப்பை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பொய்யாக்கினார். அதாவது 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் விளாசி 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தொடங்கினார்.
ரோஹித் ஷர்மாவின் இடத்தை இவர் தன்னுடைய பேட்டிங் மூலம் நிரப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். 23 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட் கோலி. அப்போது சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் வந்த அக்ஸர் படேல் விராட் கோலியுடன் ஜோடி அமைத்து பார்ட்னர்ஷிப்பை அருமையாக அமைத்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு மளமளவென ரன்கள் உயர்ந்தது. அப்போது அக்ஸர் படேல் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்:
அதாவது 31 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 47 ரன்களை குவித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி 49 பந்துகளில் தன்னுடைய 38 வது டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.மொத்தம் 59 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 76 ரன்களை விளாசினார்.பின்னர் வந்த ஷிவம் துபே 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 27 ரன்களை குவித்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 5 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கினார்கள். இதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்களில் நடையைக்கட்டினார். பின்னர் வந்த ஐடன் மார்க்ரமும் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அருமையாக விளையாடினார்கள். அப்போது டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களில் அவுட்டானார். குயின்டன் டி காக் 39 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது. அந்தவகையில் இந்திய அணி 7 ரன்களில் வெற்றி பெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

