(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs SA, 2nd Innings Highlights: கைவிட்டுப் போகும் ஆட்டம், நாளை மீளுமா இந்திய அணி? - மூன்றாம் நாள் அப்டேட்
நாளை நடக்க இருக்கும் நான்காம் நாள் ஆட்டம், போட்டியை வெல்லப்போவது யார் என்பதையும், தொடரை வென்ற அணி எது என்பதையும் தீர்மாணித்துவிடும் என தெரிகிறது.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 101/2 என்ற நிலையில் இருக்கும் தென்னாப்ரிக்கா, இன்னும் 111 ரன்கள் எடுக்க வேண்டும். கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று விராட் கோலி தலைமையிலான அணி வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் ஆடிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மட்டும் 79 ரன்கள் அடித்தார். புஜாரா 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்க முதலே வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது. பும்ராவின் வேகத்தில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்காரணமாக இந்திய அணிக்கு 13 ரன்கள் முன்னிலையையும் அளித்தது. அசத்தலாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
தென்னாப்ரிக்காவை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸைப் போலவே ஓப்பனர்கள் ஏமாற்றம் அளித்தனர். ரபாடா பந்துவீச்சில் மயாங்க் (7) ரன்களுக்கு வெளியேற, ஜென்சன் பந்துவீச்சில் ராகுல் (10) வெளியேறினார். இதனால், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாரா மற்றும் கேப்டன் கோலி களத்தில் இருந்தனர்.
Stumps!
— ICC (@ICC) January 13, 2022
Bumrah snares Elgar at the very end, setting up an intriguing fourth day.
South Africa need 111 runs to win, India eight wickets 👀
Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/vKcwRxGMk9
அதனை அடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே புஜாரா அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய ரஹானேவும் சொதப்ப, பண்ட் களமிறங்கினார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய பண்ட், போகப்போக அதிரடி காட்ட தொடங்கினார். 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 139 பந்துகளில் 100* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அசத்தி இருக்கிறார் பண்ட். மற்ற பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால், இரண்டாம் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் குவித்திருக்கிறது இந்திய அணி.
இதனால், தென்னாப்ரிக்கா வெற்றி பெற 212 ரன்கள் தேவைப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டம் இன்னும் மீதம் இருந்த நிலையில், தென்னாப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஓப்பனர்கள் மார்க்கரம், எல்கர் ஆகியோர் நிதானமாக பேட் செய்து ரன் சேர்த்தனர். இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருக்கிறது தென்னாப்ரிக்க அணி. இதனால், நாளை நடக்க இருக்கும் நான்காம் நாள் ஆட்டம், போட்டியை வெல்லப்போவது யார் என்பதையும், தொடரை வென்ற அணி எது என்பதையும் தீர்மாணித்துவிடும் என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்