IND vs SA T20 : தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா...? இன்று கட்டாக்கில் இரண்டாவது டி20யில் மோதல்..!
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டேவிட் மில்லர் மற்றும் வான்டர் டுசென் அதிரடியால் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்த போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கட்டாக் மைதானத்தில் நேற்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் கடந்த போட்டியில் அருமையாக செயல்பட்டனர். அந்த அதிரடி இந்த போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஷான்கிஷான், கெய்க்வாட், ஸ்ரேயாஸ், ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இன்றும் அதிரடி காட்டினால் கண்டிப்பாக இந்தியா இமாலய இலக்கை எட்டும்.
தென்னாப்பிரிக்க அணிக்கு கடந்த போட்டியில் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. மில்லர் மற்றும் வான்டர் டுசென் அதிரடி இந்த போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குயின்டின் டி காக்கின் அதிரடி தென்னாப்பிரிக்காவிற்கு அவசியம் ஆகும்.
இரு அணிகளைப் பொறுத்தவரையிலும் பந்துவீச்சு மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்திய அணி கடந்த போட்டியில் தோற்றதற்கு மோசமான பந்துவீச்சே காரணம் ஆகும். புவனேஷ்குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான், அக்ஷர் படேல் என அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். இதனால், பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக வீசினால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும். இந்த போட்டியில் உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப்சிங் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
தென்னாப்பிரிக்க அணியிலும் கேசவ் மகாராஜ், ரபாடா, நோர்ட்ஜே, பர்னெல் ப்ரெட்ரியஸ் என அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். அவர்களும் கட்டுக்கோப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும். கே.எல்.ராகுல் திடீரென காயத்தால் விலகியதால் ரிஷப்பண்டின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
கடந்த போட்டியின் தோல்வியால் ரிஷப்பண்ட் கேப்டன்ஷிப் மீது விமர்சனம் எழுந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ரிஷப்பண்ட் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தருவாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்