IND vs SA 1st Test: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்... தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 408 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெஸ்ட் தொடர்:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது.
ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.
அதன்படி சென்சுரியனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இதில் 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஜஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் சொதப்பினாலும், அடுத்து வந்த விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தனர். பின்னர், களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அந்த வகையில், 137 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.
ஆல்-அவுட்:
அதனைத்தொடர்ந்து விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்தது. இதில், தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிய ஐடன் மார்க்ராம் 5 ரன்களில் நடையைக்கட்டினார். மறுபுறம் பொறுமையாக விளையாடிய டீன் எல்கர் சதம் விளாசினார்.
அதன்படி, 287 பந்துகள் களத்தில் நின்ற அவர் 185 ரன்களை எடுத்தார். அதோடு டேவிட் பெடிங்காம் 56 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக 108. 4 ஓவர்கள் களத்தில் நின்ற அந்த அணி மொத்தம் 408 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்ப்ரித் பும்ரா 26. 4ஓவர்கள் வீசி 5 ஓவர்கள் மெய்டன் செய்து 69 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், 24 ஓவர்கள் பந்து வீசிய முகமது சிராஜ் 1 ஓவர் மெய்டன் செய்து 91 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சர்தால் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது இந்திய அணி 2 வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
மேலும் படிக்க: IND vs SA 1st Test : இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்... 9 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசிய முதல் வீரர்... டீன் எல்கர் சாதனை!
மேலும் படிக்க: EXCLUSIVE: கபடி வீரர்களில் நிறைய பேர் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்... தமிழ் தலைவாஸ் வீரர்கள் சொன்ன விஷயம்..