Sai Sudharsan: சர்வதேச அளவில் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சாய் சுதர்சன்
தென்னிப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
![Sai Sudharsan: சர்வதேச அளவில் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சாய் சுதர்சன் IND vs SA 1st ODI Sai Sudharsan Maiden Half Century ODI Debut India vs South Africa 1st ODI Sai Sudharsan: சர்வதேச அளவில் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சாய் சுதர்சன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/18400e19a43ac4cda078e2660e641bd21702802430640428_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலேயே இந்திய அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அரைசதம் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார். மேலும் இவர் தமிழ்நாட்டினைச் சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் விளையாடி இருந்தாலும் அவர் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர்தான். கடந்த 16வது ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் சார்பாக விளையாடிய சாய் சுதர்சனின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டது. குஜராத் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய அவர், மூன்று அரைசதங்கள் உட்பட 362 ரன்கள் குவித்திருந்தார். இதுவரை 12 முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், 25 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி, முதல்தர கிரிக்கெட்டில் 843 ரன்களும், லிஸ்ட் ஏவில் 1269 ரன்களும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் ஐபிஎல் மற்றும் டி.என்.பி.எல் போட்டிகள் என மொத்தம் 31 டி20 போட்டிகளில் விளையாடி 1324 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு இந்திய அணியில் தொடக்கத்திலேயே வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்கா தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டார். அணியில் சேர்க்கப்பட்ட சாய் சுதர்சன் போட்டியில் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அவருக்கு முதலாவது ஒருநாள் போட்டியிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் தொடக்க வீரராகவும் களமிறக்கப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் தனது சர்வதேச அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது மட்டும் இல்லாமல் இறுதிவரை களத்தில் தனது விக்கெட்டினை இழக்காமல் இருந்தார். இவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளை விளாசி 55 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். தமிழ்நாட்டினைச் சேர்ந்த வீரரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் தான் அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் விளாசி இறுதிவரை களத்தில் தனது விக்கெட்டினை இழக்காமல் இருந்து தமிழ்நாட்டில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு உத்வேகத்தினையும் தமிழ்நாட்டிற்கு பெருமையையும் ஏற்படுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று அதாவது டிசம்பர் 17ஆம் தேதி இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இந்திய அணி பந்து வீசத் தொடங்கியது.
இளம் இந்திய பந்து வீச்சாளர்கள் பலமான தென்னாப்பிரிக்கா அணியை என்ன செய்யவுள்ளனர் என்ற ஆவல் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பிலோ இந்திய அணிக்கு சவாலான இலக்கினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கினர். ஆனால் தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும் அவேஷ்கான் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயம் செய்த 117 ரன்கள் இலக்கினை 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் எட்டியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)