IND vs ENG 5th Test: இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி - தர்மசாலாவில் இன்று தொடக்கம்
IND vs ENG 5th Test: இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்குகிறது.
IND vs ENG 5th Test: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 3-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.
டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றாலும், அதிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி அடுத்தடுத்து 3 போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. இதன் மூலம், 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனை இன்னும் தொடர்கிறது. இந்நிலையில், தொடரின் கடைசிப் போட்டி, தர்மசாலாவில் இன்று தொடங்குகிறது.
முதலிடத்தில் தொடருமா இந்தியா?
இந்திய -இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டியின் நேரலையை, தொலைக்காட்சியில் 18ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில், முதலிடத்தை தக்க வைக்க இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதேநேரம், ஏற்கனவே தொடரை இழந்த இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகளின் பலம், பலவீனம்:
உள்ளூர் மைதானங்களில் விளையாடுகிறோம் என்ற பிரதான சாதகத்துடன் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள், தொடரில் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். காயம் காரணமாக பல மூத்த வீரர்கள் தொடரிலிருந்து விலகினாலும், இளம் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். பந்துவீச்சும் சிறப்பாக இருந்துள்ளது. புதியதாக தவறுகள் எதுவும் செய்யாமல், கடந்த 3 போட்டிகளை போன்றே சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியின் வெற்றி எளிதாகலாம். மறுமுனையில் அதிரடியான பேட்ட்ங்கிற்கு பெயர் போன இங்கிலாந்து அணி, கடந்த 3 போட்டிகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்பட வில்லை. நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தும், அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பங்களிப்பு இல்லை. இந்திய சூழலுக்கு ஏற்ற, அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததும், இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தர்மசாலா மைதானம் எப்படி?
தர்மசாலாவில் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2017-ம் ஆண்டில் நடந்த போட்டியில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மூன்று வாரங்களுக்கு முன்பு இங்கு நடந்த டெல்லி- இமாசலபிரதேசம் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட்டில் சரிந்த 36 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே அள்ளினர். அதே ஆடுகளம் தான் இந்த போட்டிக்கும் பயன்படுத்தப்படுகிறது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை கொண்ட தர்மசாலாவில் முதல் இரு நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 10 டிகிரி அளவுக்கே இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
பிளேயிங் லெவன்:
இந்தியா உத்தேச அணி: ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்து அணி: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட்