(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG:ஆட்டத்தின் போக்கை மாற்றிய போப்... 'அவருக்கு எல்லாமே தெரிஞ்சுருக்கு'; அனில் கும்ப்ளே!
இந்தியா போன்ற ஆடுகளங்களில் நமது சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு ஒல்லி போப் ஆடியுள்ளார் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
வெற்றியை தட்டிச் சென்ற இங்கிலாந்து:
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 426 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்த வரை முதல் இன்னிங்ஸில் நன்றாக இருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடியது. அதன்படி, அந்த அணி மொத்தம் 420 ரன்களை குவித்தது. அதேநேரம் இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்த வரை 16 ஓவர்கள் மட்டுமே வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்களை மெய்டன் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய போப்:
முன்னதாக, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி சதம் விளாசிய ஒல்லி போப் ஆட்டம் தான். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினார். அதன்படி 278 பந்துகள் களத்தில் நின்ற அவர் 21 பவுண்டரிள் உட்பட 196 ரன்களை விளாசினார்.
இந்நிலையில் இவரின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஒல்லி போப் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடி உள்ளார். இந்தியா போன்ற ஆடுகளங்களில் நமது சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அவர் ஆடியது எனக்குத் தெரிந்தது” என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்ல வேண்டிய இந்திய அணி தற்போது தோல்வியை அடைந்ததற்கு காரணமும் அவரது ஆட்டம் தான் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க: IND vs ENG Test: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சொதப்பல் பேட்டிங்; 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
மேலும் படிக்க: IND vs ENG Test: பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை காலிசெய்த அஸ்வின்... கபில் தேவ் சாதனை சமன்! விவரம் இதோ!