IND vs BAN Highlights: விராட் கோலி அபார சதம்.. வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திய இந்தியா!
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, 17 வது லீக் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது. இந்த போட்டியானது புனேவில் உள்ள மகராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
அதன்படி, டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இவர்களது ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.
அதில் தன்சித் ஹசன் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்கள் எடுத்தார். அதேபோல், லிட்டன் தாஸ் 82 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 66 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் அடித்தது வங்கதேச அணி.
257 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா:
257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
அதில், 40 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 7 பவுண்டரிகள் உட்பட 2 சிக்ஸர்கல் என மொத்தம் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சுப்மன் கில் அரைசதம் அடித்தார். 55 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
முன்னதாக 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 132 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
அபார சதம் அடித்த கிங்கோலி:
இந்த போட்டியில் சதம் அடிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா சதம் அடிக்க தவறினார். ஆனால், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி அந்த குறையை நீக்கி வைத்தார். அதன்படி, மொத்தம் 97 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 103 ரன்களை குவித்தார்.
மேலும், இந்திய அணியை சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் கோலியின் இந்த சதத்தையும் இந்தியாவின் வெற்றியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம் 4 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 4 போட்டிகளிலும் வெற்றி அடைந்து இருக்கிறது. மேலும், ஐந்தாவது வெற்றியை நோக்கி அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
மேலும் படிக்க: India vs Bangladesh: 1998-ல் மோசமான தோல்வி; 25 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் வங்கதேசம் - வெற்றியை வசமாக்குமா?
மேலும் படிக்க: CWC 2023: எல்.பி.டபிள்யூ.வை கோட்டைவிட்ட இந்தியா... ஆட்டத்தின் போக்கை மாற்றிய தன்சித் ஹசன்!