147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்கள் பட்டியலை கீழே காணலாம்.
147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 வடிவ போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடப்பட்டு வருகிறது. வீரர்களின் ஆட்டத்திறனை வைத்து தரவரிசை மதிப்பிடப்படுகிறது. இந்த தரவரிசைப் பட்டியலை வீரர்களை வைத்தும், அணியை வைத்தும் ஐசிசி வெளியிட்டு வருகிறது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை உலகிலேயே தலைசிறந்த வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
பேட்ஸ்மேன் - டெஸ்ட்:
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் டான் பிராட்மேனே தற்போது வரை தலைசிறந்தவராக உள்ளார். அவரின் பேட்டிங் சராசரி 99.99 ஆகும். 1948ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக ஆடியபோது அவரது தரவரிசைப் புள்ளிகள் 961 ஆக இருந்தது. இதுவரை அந்த புள்ளியை எந்த வீரரும் சமன் செய்யவில்லை. ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் சாதனையை மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகள் எடுத்து அருகில் நெருங்கினார். இந்த ஆல் டைம் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 11வது இடத்தில் உள்ளார். அவர் 937 புள்ளிகள் அதிகபட்சமாக எடுத்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் 898 புள்ளிகளுடன் 34வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர் - டெஸ்ட்:
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இங்கிலாந்தைச் சேர்ந்த சிட்னி பர்னெஸ் ஆவார். அவர் 932 புள்ளிகள் பெற்றுள்ளார். 1914ம் ஆண்டு அவர் படைத்த இந்த சாதனை 100 ஆண்டுகளுக்கும் மேலாகவும் முறியடிக்கப்படவில்லை. இதில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 3வது இடத்தில் உள்ளார். அவர் 922 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பும்ரா மற்றும் அஸ்வின் 904 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளனர்.
பேட்டிங் - ஒருநாள்:
ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்போது வரை தலைசிறந்த வீரராக திகழ்பவர் விவ் ரிச்சர்ட்ஸ். அவர் 1985ம் ஆண்டு 935 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்தார். சுமார்40 ஆண்டுகளாக அந்த சாதனையை யாரும் நெருங்கவில்லை. 2வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் ஜாகிர் அப்பாஸ் உள்ளார். அவர் 931 புள்ளிகள் பெற்றுள்ளார். இதில் இந்திய வீரர் விராட் கோலி 911 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார். 2018ம் ஆண்டு விராட்கோலி இந்த சாதனையை படைத்தார். டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார்.
பந்துவீச்சாளர் - ஒருநாள்:
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஜோயல் கார்னர் வைத்துள்ளார். அவர் 1985ம் ஆண்டு 940 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் திகழ்ந்தார். இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் ஒரு இந்தியர் கூட இல்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் பட்டியலில் உலகின் டாப் 10 பந்துவீச்சாளர்களில் ஒருவராக தமிழரான முத்தையா முரளிதரன் இடம்பிடித்துள்ளார்.
டி20 போட்டிகள் - சிறந்த பேட்ஸ்மேன்:
21ம் நூற்றாண்டின் நவீன கிரிக்கெட் வடிவமான டி20 போட்டியில் சிறந்த வீரராக இங்கிலாந்தின் டேவிட் மலான் திகழ்கிறார். அவர் 915 புள்ளிகளுடன் உள்ளார். 2வது இடத்தில் 910 புள்ளிகள் பெற்று சூர்யகுமார் யாதவ் உள்ளார். கோலி 4வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர் - டி20:
டி20 கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை உமர்குல் வைத்துள்ளார். அவர் 2009் ஆண்டு 857 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் திகழ்ந்தார். இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் ஒரு இந்தியருக்குக் கூட இடமில்லை.
மகளிர் கிரிக்கெட் போட்டி சமீபகாலமாகவே அனைத்து வடிவிலும் நடத்தப்பட்டு வருவதால் அதற்கான ஆல் டைம் பட்டியல் வகைப்படுத்தப்படவில்லை.