Gautam Gambhir Press Conference: பந்து வீச்சாளர்கள் தான் மாஸ் - ப்ளேயிங் லெவன் இப்படி தான் இருக்கும்! அசராமல் பதில் சொன்ன கம்பீர்
ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜ், சமி, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் பந்துவீச்சாளர்களை பற்றி பேசவைத்துள்ளார்கள் என கெளதம் கம்பீர் கூறினார்.
ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜ், சமி, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் பந்துவீச்சாளர்களை பற்றி பேசவைத்துள்ளார்கள் என கெளதம் கம்பீர் கூறினார்.
இந்தியா - வங்கதேசம்:
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - வங்கதேச டெஸ்ட் நாளை (செப்டம்பர் 19) நடைபெற உள்ளது. அந்தவகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற வங்தேச அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு அங்கமாக இருப்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இச்சூழலில் இன்று (செப்டம்பர் 18) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பேசுகையில்,"நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். ஆனால் மற்றவர்களின் திறமையை மதிப்போம். களத்தில் இரண்டு அணிகளுமே சிறந்த அணிகள் தான். யார் வியூகங்களை சிறப்பாக கட்டமைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
அஸ்வின் - குல்தீப் கம்பீர் பெருமை:
அஸ்வின், குல்தீப் இருவரும் முதல் நாளில் இருந்து ஐந்தாவது நாள் வரை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய மைதானங்களில் இருவரும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள். இந்த டெஸ்ட் போட்டியில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமையும். வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் மூத்த வீரர்கள், இளைய வீரர்கள் என அனைவரிடமும் சுமூகமான உறவில் தான் இருக்கிறேன். இது அணியின் வெற்றிக்கு முக்கியமானது.
பந்து வீச்சாளர்கள் தான் இப்போ மாஸ்:
எப்பவும் பேட்ஸ்மேன்கள் பற்றியே கேள்வி கேட்கப்படும். பந்துவீச்சாளர்களை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது மகிழ்ச்சியே. பும்ரா, சிராஜ், சமி, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் பந்துவீச்சாளர்களை பற்றி பேசவைத்துள்ளார்கள். பும்ரா நல்ல ஃபார்மில் உள்ளார். டி20, ஒருநாள் போட்டிகளில் சாதித்துள்ளார். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம்.
இந்தியா தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிவடையும் அளவுக்கு வேகப்பந்து வீச்சுக்கு மிக சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது குறித்து யாரும் பேசவில்லை. இந்தியாவில் இரண்டு நாட்களில் முடியும்படி ஆடுகளங்கள் அமைக்கப்படுவதில்லை. இது தவறான ஒரு பேச்சாகும். எனவே இந்திய ஆடுகளங்கள் பற்றி பேசக்கூடாது. ரிஷப் பண்ட் எவ்வளவு சிறந்தவர் அவர் எப்படி தாக்கம் செலுத்தினார் என்று நாம் எல்லோரும் பார்த்து இருக்கிறோம்.
விக்கெட் கீப்பர் யார்?
அவர் செய்துள்ளதை அவர் வயதில் பலர் செய்தது கிடையாது. அவரது பேட்டிங் அவரது விக்கெட் கீப்பிங்கை மறைத்து விடுகிறது. அவர் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர். நாங்கள் எந்த வீரரையும் கைவிட மாட்டோம் போட்டிக்குத் தேவையான வீரர்களை வைத்து பிளேயிங் லெவனை உருவாக்குவோம். துருவ் ஜூரல் ஒரு அற்புதமான வீரர். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் போன்ற வீரர் வரும்பொழுது அவர் காத்திருக்க வேண்டும். இதேதான் சர்ப்ராஸ் கானுக்கும். அவரும் தன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.