IND vs BAN: வெற்றியுடன் வெளியேறியது வங்கதேசம்.. 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி..!
இந்திய அணிக்கு எதிராக நடந்த சூப்பர் 4 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் கொழும்பு மைதானத்தில் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, தொடக்கத்தில் வங்கதேசம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஷகிப் – தௌகித்தின் அபாரமான ஆட்டத்தால் 266 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
விக்கெட்டுகள் சரிவு:
இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சிகரமாக கேப்டன் ரோகித்சர்மா டக் அவுட்டானார். இந்திய அணிக்காக அறிமுகமான திலக் வர்மா 5 ரன்களில் போல்டானார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 19 ரன்களில் அவுட்டாக, இஷான்கிஷானும் 5 ரன்களில் அவுட்டானார்.
94 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகள் விழுந்தாலும் சுப்மன்கில் தனி ஆளாக போராடினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் சுப்மன்கில் தனி ஆளாக ரன்களை சேகரித்து வந்தார். அரைசதம் கடந்த சுப்மன்கில் சிறப்பாக ஆடி 117 பந்துகளில் சதம் அடித்தார். சதத்திற்கு பிறகு சுப்மன்கில் அதிரடியாக ஆடினார். இதனால், இந்தியா இலக்கை நோக்கி முன்னேறியது.
வங்கதேசம் தோல்வி:
துரதிஷ்டவசமாக மெகிதி ஹாசன் பந்தில் சுப்மன்கில் ஆட்டமிழந்தார். அவர் 133 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் இந்திய அணியின் வெற்றிக்காக அக்ஷர் – ஷர்துல் தாக்கூர் போராடினர். மெகிதி ஹாசன் வீசிய 48வது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் அக்ஷர் பட்டேல் பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். இதனால், கடைசி 12 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், ஷர்துல் தாக்கூர் 11 ரன்னில் அவுட்டானார். இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்த அக்ஷர் படேல் 34 பந்துகளில் 42 ரன்னில் அவுட்டானார். கடைசி 6 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்துகளை டாட் செய்த ஷமி, 4வது பந்தில் பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் 2 ரன் எடுக்க ஓடியபோது ரன் அவுட்டானார். இதனால், இந்திய அணியை வங்கதேசம் அணி 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வங்கதேச அணியில் முஸ்தபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், ஆசிய கோப்பையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை வங்கேதசம் வீழ்த்தியுள்ளது. இந்திய அணியில் இந்த போட்டியில் முன்னணி வீரர்களான விராட்கோலி, பும்ரா, சிராஜ், ஹர்திக் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: SL vs PAK: கடைசி வரை திக்.. திக்..! கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி... போராடி தோற்றது பாகிஸ்தான்..!