SL vs PAK: கடைசி வரை திக்.. திக்..! கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி... போராடி தோற்றது பாகிஸ்தான்..!
ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் இலங்கை அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது.
ஆசியக்கோப்பைத் தொடரின் கொழும்பு மைதானத்தில் நடந்த சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டம் மீண்டும் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
253 ரன்கள் டார்கெட்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் ஆட்டமிழக்க, ரிஸ்வான் – இப்திகார் ஜோடியின் அபார பேட்டிங்கால் பாகிஸ்தான் அணி 252 ரன்களை குவித்தது. ரிஸ்வான் கடைசி வரை அவுட்டாகாமல் 86 ரன்களை எடுத்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் இலங்கை அணி களத்தில் இறங்கியது. ஆட்டத்தை தொடங்கிய இலங்கை தொடக்க வீரர் குசல் பெரராரா அதிரடியாக ஆடினார். அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய அவர் 8 பந்துகளில் 17 ரன்களுடன் அவுட்டானார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ், நிசங்காவிற்கு ஒத்துழைப்பு தந்தார்.
மெண்டிஸ் அபாரம்:
இருவரும் இணைந்து சிறப்பாக ஆடிய நிலையில் நிசங்கா 29 ரன்னில் ஷதாப்கான் சுழலில் வீழ்ந்தார். 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் – சதீரா ஜோடி சிறப்பாக ஆடியது. ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசி பதட்டமே இன்றி இலக்கை நோக்கி முன்னேறியது. விக்கெட் கீப்பர் மெண்டிஸ் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார்.
இந்த ஜோடியை பிரிக்க ஷாகின் அப்ரிடி, ஜமான் கான், முகமது வாசிம், முகமது நவாஸ், ஷதாப், ஆகியோரை பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சதீரா 48 ரன்னில் அவுட்டானார். பந்துக்கு ஏற்ப ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மெண்டிஸ் – அசலங்கா ஜோடி பதட்டமின்றி சிறப்பாக ஆடியது. மழை பெய்திருந்த காரணத்தால் பந்து பெரியளவில் ஸ்விங் ஆகவில்லை. சிறப்பாக ஆடி இலங்கை அணியை வெற்றி வரை அழைத்து வந்த மெண்டிஸ் இலங்கை 210 ரன்களை எட்டியபோது அவுட்டானார். அவர் 87 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 91 ரன்கள் எடுத்திருந்தார்.
திரில் வெற்றி:
அடுத்து கேப்டன் சனகா – அசலங்காவுடன் ஜோடி சேர்ந்தார். கடைசி 5 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் சனகா 2 ரன்னில் அவுட்டானதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை 222 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டம் யாருக்கு சாதகமாக அமையும் என்று ரசிகர்கள் இருக்கை நுனிக்கு வந்தனர். டி சில்வாவை மறுமுனையில் வைத்துக்கொண்டு அசலங்கா வெற்றிக்காக போராடினார்.
கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. எதிர்பாராதவிதமாக அப்ரிடியின் அடுத்தடுத்த 2 பந்துகளில் டி சில்வா, வெல்லலகே ஆட்டமிழந்தனர். இதனால், மீண்டும் ஆட்டத்தில் அனல் பறந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஒரு ரன் வர, 2வது பந்து டாட் ஆனது. 3வது பந்தில் ஒரு ரன் வந்தது. 4வது பந்தில் மதுஷன் ரன் அவுட்டாக 2 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. 5வது பந்தில் அசலங்கா பவுண்டரி அடிக்க ஒரு பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அசலங்கா இலங்கையை வெற்றி பெற வைப்பாரா? ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லுமா? பாகிஸ்தான் வெல்லுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. அசலங்கா மிகவும் சாமர்த்தியமாக ஆளே இல்லாத இடத்தில் பந்தை அடித்துவிட்டு 2 ரன் எடுத்து இலங்கையை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை மோத உள்ளது.