IND Vs AUS W Semi: உலகக் கோப்பை - இன்று ஆஸி.,யை வீழ்த்துமா இந்திய அணி? ஃபைனலில் தெ.ஆப்., மோதுவது யார்?
IND Vs AUS W Womens Worldcup 2025 Semi: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இன்று இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.

IND Vs AUS W Womens Worldcup 2025 Semi: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இன்று நவி மும்பையில் நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை - 2வது அரையிறுதி
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலிய அணி, நான்காவது இடத்தை பிடித்த இந்திய அணி மோத உள்ளது. நவி மும்பையில் உள்ள டிஆர்ஒய் பாட்டில் மைதானத்தில், பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் தீவிரம்காட்டுவதால், போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
அரையிறுதி - இந்தியா Vs ஆஸ்திரேலியா
நடப்பு உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வி காணாமல், முதல் அணியாக நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 12 உலகக் கோப்பை போட்டிகளில், 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தொடர்ந்து, 8வது முறையாகவும் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், தனது முதல் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. ஆரம்பத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்றாலும், ஹாட்ரிக் தோல்வியை எதிர்கொண்டு கடும் போட்டிகளுக்கு மத்தியிலேயே அரையிறுதிக்கு கடைசி அணியாக தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் கண்ட தோல்விக்கு, இந்திய அணிக்கு பழி தீர்த்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா Vs ஆஸ்திரேலியா - பலம் , பலவீனம்
ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவாக காணப்பட்டாலும், கேப்டன் ஹீலி இன்றைய போட்டியில் பங்கேற்பாரா? என்பது தற்போது வரை சந்தேகமாகவே உள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வருவதோடு, நேற்றைய வலைப்பயிறிசியிலும் அவர் காணப்பட்டார். இதனால் இன்றைய போட்டியில் விளையாடக்கூடும் என கூறப்படுகிறது.
மறுமுனையில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ப்ரதிகா ராவல் காயம் காரணமாக வெளியேற, இளம் வீராங்கனையான ஷஃபாலி வர்மா இன்று, துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்க உள்ளார். பேட்டிங் யூனிட் ஓரளவிற்கு வலுவாகவே உள்ளது. பந்துவீச்சு யூனிட்டும் ஈடுகொடுத்து செயல்பட்டால், இன்றைய போட்டியில் வெல்ல வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்தியா Vs ஆஸ்திரேலியா - நேருக்கு நேர்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 60 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 49 முறையும், இந்திய அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
மைதானம் எப்படி? - ரிசர்வ்டே இருக்கா?
கடந்த சில வருடங்களில் நவிமும்பை மைதானம் மகளிர் கிரிக்கெட்டில் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. ஆனால், நடப்பு சீசனில் தான் முதன்முறையாக அங்கு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. அங்கு நடந்த மூன்று போட்டிகளில் ஒன்று மழையால் கைவிடப்பட, மற்ற இரண்டிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியின் போது மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனை மனதில் கொண்டு டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்ல முடிவாக இருக்கும். ஒருவேளை போட்டியை நடத்த முடியாத அளவிற்கு இன்று மழை பெய்தால், ஐசிசி விதிகளின்படி ரிசர்வ் டே பின்பற்றப்பட்டு நாளை நடத்தப்படும்.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, அமஞ்சோத் கவுர், சினே ராணா, ரேணுகா சிங் தாக்கூர், என்எஸ் ஸ்ரீ சரணி
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், கிம் கார்த், மேகன் ஸ்கட்
ஃபைனலில் தென்னாப்ரிக்கா..
முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து, 319 ரன்களை விளாசியது. கேப்டன் லாரா அதிரடியாக விளையாடி 169 ரன்களை குவித்து மிரட்டினார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 194 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. குறிப்பாக முதல் 3 பேர் தொடர்ச்சியாக டக்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்ரிக்கா அணி, முதல்முறையாக ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றைய அரையிறுதியில் வெற்றி பெறும் அணி வரும் 2ம் தேதி, தென்னாப்ரிக்கா உடன் இறுதிப்போட்டியில் மோத உள்ளது.



















