IND vs AUS: பிங்க் நிற பந்து! பகலிரவு டெஸ்ட்-க்கு மட்டும் ஏன் இந்த Ball? அப்படி என்ன ஸ்பெஷல்?
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பிங்க் எனப்படும் இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது. எதற்காக அந்த பந்துகள் பயன்படுத்தப்படுகிறது? என்பதை கீழே காணலாம்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்றாலே பகல் நேரத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. ஒருநாள் போட்டிகள் மட்டுமே பகலிரவு போட்டிகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டுவருகிறது.
பிங்க் நிற பந்துகள்
பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் பிங்க் நிறம் எனப்படும் இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக, டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகளே பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு ஏன்?
பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் இந்த பிங்க் நிற பந்துகளை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் இந்த பந்துகள் செயற்கை வெளிச்சத்தில் பேட்ஸ்மேன்களுக்கும், ஃபீல்டர்களுக்கும் நன்றாக கண்ணுக்குத் தெரியும் என்பதே ஆகும். வழக்கமாக பயன்படுத்தப்படும் சிவப்பு பந்துகள் மைதானத்தில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் வௌிச்சத்தில் வீரர்களின் கண்ணுக்குத் தெரிவதில் சிரமம் உள்ளது. இந்த இளஞ்சிவப்பு நிற பந்துகளில் அதுபோன்ற சிரமம் பேட்ஸ்மேன்களுக்கும், ஃபீல்டர்களுக்கும் இருக்காது.
இளஞ்சிவப்பு நிற பந்துகள் சிவப்பு நிற பந்துகளை காட்டிலும் நன்றாகவே பளபளப்பாக இருக்கும். இது வெளிச்சத்தில் இன்னும் நன்றாகவே பேட்ஸ்மேன்களுக்கும், ஃபீல்டர்களுக்கும் கண்களுக்குத் தெரியும். வௌிச்சம் குறைவான இடங்களிலும் இது வீரர்களுக்கு சவாலாக இருக்காது.
யாருக்கு சவால்?
பிங்க் நிற பந்துகள் கருப்பு மற்றும் வெள்ளை நிற நூல்களால் அதன் வெளிப்புற தையல் போடப்பட்டிருக்கும். சிவப்பு நிற பந்தை காட்டிலும் இதில் கூடுதலாக ஒரு லேயர் இருக்கும். இது அதன் பளபளக்கும் தன்மையையும், மைதானத்தில் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கும் பக்கபலமாக அமைகிறது. சிவப்பு நிற பந்தை காட்டிலும் பிங்க் நிற பந்து நன்றாகவே ஸ்விங் ஆகும்.
பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே அதிகளவு இருக்கும். அதுவும் புதிய பந்துகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாகவே ஸ்விங் செய்வார்கள். சிவப்பு நிற பந்தை காட்டிலும் தொடக்க ஓவர்களில் இந்த இளஞ்சிவப்பு நிற பந்துகளில் இன்னும் அதிகமாகவே ஸ்விங் செய்ய முடியும்.
3 வகை பந்துகள்:
சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்துகள் மூன்று வகைககளாக தயாரிக்கப்படுகிறது. எஸ்.ஜி., ட்யூக்ஸ் மற்றும் கூக்கபூரா. இதில் எஸ்.ஜி. வகை பந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. டியூக்ஸ் பந்துகள் பொதுவாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் பயன்படுத்தபபடுகிறது.
மற்ற நாடுகளில் கூக்கபுரா பந்துகள் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கூக்கபுரா பந்துகளே பயன்படுத்தப்படுகிறது. எஸ்.ஜி. மற்றும் ட்யூக்ஸ் வகை பந்துகள் கைகளாலே அதன் தையல் போடப்படுகிறது. ஆனால், கூக்கபுரா பந்துகள் முழுவதும் இயந்திரங்கள் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.
எஸ்.ஜி. மற்றும் ட்யூக்ஸ் பந்துகளுடன் ஒப்பிடும்போது கூக்கபுரா பந்துகளின் வேகம், ஸ்விங் சற்று வித்தியாசமாகவே இருக்கும். இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. அதில், இந்த பிங்க் நிற பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளது.