IND vs AUS 2nd T20: இந்தியா-ஆஸி. டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் ஈரப்பதம்... 8 மணிக்கு நடுவர்கள் ஆய்வு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது,
இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாக்பூர் மைதானத்தில் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ள காரணத்தால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆடுகளத்தை நடுவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது இன்னும் சற்று ஈரப்பதம் இருந்ததால் மீண்டும் இரவு 8 மணிக்கு நடுவர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்ய உள்ளனர். நடுவர்கள் ஆய்வு செய்த பின்னர் டாஸ் நடைபெற்று போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதில் 1 மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஓவர்கள் குறைக்க வாய்ப்பு உள்ளது.
Next inspection at 8 PM IST.#INDvAUS https://t.co/mxqSmLaxYm
— BCCI (@BCCI) September 23, 2022
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை நாக்பூரில் 5 முறை விளையாடி உள்ளனர். அவற்றில் இந்திய அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது வரை 23 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இந்திய அணி 13 முறையும், ஆஸ்திரேலிய அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்திய மண்ணில் தற்போது வரை 8 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இந்திய அணி 4 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்திய அணி தொடர்பாக முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, “ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அப்போது அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் மாற்று வீரராக வந்தார். ஆனால் அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இல்லை. அப்படி இருக்கும் போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் அப்படி இந்திய அணியில் இடம்பிடித்தார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்களில் ஒருவரான தீபக் சாஹர் ஏன் அணியில் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ரிசர்வ் பட்டியலில் உள்ள வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும். ஏனென்றால் டி20 உலகக் கோப்பை தொடரில் யார்க்காவது காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக இவர்கள் தான் களமிறங்க உள்ளனர். அப்படி இருக்கும் போது ஏன் உமேஷ் யாதவ் அணியில் விளையாடினார். தீபக் சாஹருக்கு காயம் எதுவும் உள்ளதா அது பற்றி ஒரு தகவலும் இல்லையே. இந்த அணி தேர்வு தொடர்பாக இந்திய அணி நிர்வாகம் அடுத்த முறை செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: டி20 உலகக்கோப்பைக்கு கார்த்திக்கா..? ரிஷப்பா..? கில்கிறிஸ்ட்டின் தேர்வு யார்..?