WTC Points Table: நொறுங்கிய வங்கதேசம்; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை புரட்டிப்போட்ட இலங்கை!
ICC World Test Championship Points Table Updated: இலங்கை அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டி முடிந்த பின்னரும் புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்படும். அவ்வகையில் இலங்கை வங்கதேச அணியை வீழ்த்திய பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளிலியே மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த மற்றும் மிகவும் சவால் அளிக்கக் கூடியது டெஸ்ட் கிரிக்கெட் வகைதான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களே, தங்கள் நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவேண்டும் என முயற்சிப்பார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 60 ஓவர் ஒருநாள் கிரிக்கெட், 50 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட், ரசிகர்களை கவர்வதற்காகவும் வியாபார நோக்குடனும் கொண்டு வரப்பட்டுள்ள டி 20 கிரிக்கெட் என கிரிக்கெட் பல பரிமாணங்களை எடுத்திருந்தாலும், 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. இப்படியான நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டிற்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதைப் போலவே, டெஸ்ட் கிரிக்கெட்டிற்காகவும் உலகக் கோப்பையை நடத்தி வருகின்றது.
இதில் இதற்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டு என இரண்டு முறை இறுதிப் போட்டிகளை ஐசிசி நடத்தியுள்ளது. அதில் முதல் முறை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, ஐசிசி சாம்பியன்ஷிப்பில் முதல் பெயரைப் பதித்தது.
அதேபோல் இரண்டாவது இறுதிப் போட்டி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொண்டது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி வங்கதேசத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்ற இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இதனால் இலங்கை அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளன. ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. ஆறாவது இடத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியும், ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணி உள்ளது. கடைசி இடமான ஒன்பதாவது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.